கோவை: கோவை சிறையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடியை வரைந்த கைதி மீது உபா சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆசிப் என்ற ஆசிப் முஸ்தகீன் (30), ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு ஆதரவாளராக செயல்பட்டதால், என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவரைப் பிடித்து, ஈரோடு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். ஈரோடு போலீஸார் அவரைக் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை சிறையின் மையப் பகுதியில் உள்ள 10-ஏ பிளாக்கில் ஆசிப் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிறைத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சிறை வளாகத்தில் திடீர் சோதனைநடத்தினர்.
அப்போது, ஆசிப் தனது அறையில் சோதனை நடத்த எதிர்ப்புத் தொிவித்தார். எனினும் சிறைக் காவலர்கள் அவரிடம் சோதனை நடத்தினர். அப்போது, அவரது பேன்ட் பாக்கெட்டில், கருப்பு மையால் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடியை வரைந்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து அவரிடம் சிறைக் காவலர்கள் விசாரித்தபோது, "உங்கள் நாட்டு தேசியக் கொடியை நீங்கள் வைத்துள்ளீர்கள். எனக்கு விருப்பமான கொடியை நான் வைத்துள்ளேன். விரைவில் வெளியே சென்று ஐஎஸ் அமைப்புக்கான பணியை மேற்கொள்ளப் போகிறேன். அப்போது நீங்களும் இருக்கமாட்டீர்கள். இந்த சிறையும் இருக்காது" என்று கூறி, சிறைக் காவலர்களுக்கு மிரட்டல் விடுத்தாராம்.
இது தொடர்பாக மத்திய சிறை ஜெயிலர் சிவராசன், கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டல் விடுத்தல், மற்றும் உபா (சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம்) ஆகிய 3 சட்டப் பிரிவுகளின் கீழ் ஆசிப் மீது ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக அவரைக் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மீண்டும் மத்திய சிறையில் அடைத்தனர்.