சென்னை: சாய்பாபா கோயிலில் 4.5கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கோட்டூர்புரத்தில் உள்ள கோட்டூர் கார்டன் 2-வது பிரதான சாலையில் ஸ்ரீ ஆனந்த சாய் கோயில் உள்ளது. இந்த கோயில் கடந்த13-ம் தேதி இரவு 7 மணியளவில் வழக்கம்போல் பூட்டப்பட்டது. மறுநாள் காலை அதன் நிர்வாகிகள் வந்து பார்த்தபோது, கோயில் கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டிருந்தது. மேலும், கோயிலில் இருந்த 4.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் பூஜைப் பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த கோயில்பூசாரி ஆனந்தன் இதுகுறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து, சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.