வேலூர்: இணையதள சேவையின் வளர்ச்சி மனிதனின் வேலையை சுலபமாக்கியது ஒரு பக்கம் இருந்தாலும், அதன் பாதிப்புகள் பெரியளவில் சமூகத்தின் கடைசி நிலை வரை ஊடுருவிஉள்ளதை பார்க்க முடிகிறது. உலகம் உள்ளங்கையில் வந்தாலும், மோசடி செய்யும் திருட்டு கூட்டங்கள் பல்வேறு வழிகளில் வந்துகொண்டே இருக்கிறார்கள். திருட்டு கூட்டங்களை தடுக்க வேண்டியது அரசாங்கமாக இருந்தாலும், நாம் விழிப்புடன் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். கடந்த சில ஆண்டுகளாக ‘ஆன்லைன்’ மோசடி வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பகுதி நேர வேலை என்பதை நம்பி லட்சங்களை இழக்கும் இளைஞர்களின் நிலை பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது. கூடவே இருக்கும் நண்பனுக்கு தேநீர் கூட வாங்கிக்கொடுக்க முடியாதவர்கள் பணத்தாசையால் பல லட்சங்களை இழந்து கண்ணீர் வடிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
வேலூர் மாவட்டத்தில் சமீபகாலமாக பகுதிநேர வேலை தருவதாக ‘ஆன்லைனில்’ வரும் மோசடி தகவல்களை நம்பி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர். இதில், பிரதானமாக இருப்பது டெலிகிராம் செயலி. அதில், வரும் குறுஞ்செய்தியை நம்பி ‘ஆன்லைனில்’ கணக்கு தொடங்கி சிறுக, சிறுக பணத்தை முதலீடு செய்து அவர்கள் கொடுக்கும் சுலபமான வேலையைமுடித்துக் கொடுத்து கடைசியில் பல லட்சங்களை ஏமாந்து நிற்கின்றனர். ‘ஆன்லைன்’ விளம்பரங்களை நம்பி பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என காவல் துறையினர் ஒரு பக்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், மறு பக்கம் ஏமாறுபவர்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
‘ஆன்லைன்’ வேலை வழங்க 1,000 ரூபாய் செலுத்தினால் ரூ.2 ஆயிரம், ரூ.2 ஆயிரம் செலுத்தினால் ரூ.5 ஆயிரம், ரூ.5 ஆயிரம் செலுத்தினால் ரூ.40 ஆயிரம், ரூ. 40 ஆயிரம் செலுத்தினால் ரூ.1.50 லட்சம் கிடைக்கும் என வலைவிரித்து ஆசையை தூண்டி மோசடியில் ஈடுபடுகின்றனர். மேலும், ‘ஆன்லைன்’ மோசடியில் ஈடுபடுபவர்கள் ஆதார் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை திருடி வாடிக்கையாளருக்கு தெரியாமலேயே E-KYC மூலம் வங்கி கணக்குகள் தொடங்கி மோசடிக்கு பயன்படுத்தி வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல் துறையினர் எச்சரிக்கின்றனர்.
அதேபோல், தனிப்பட்ட விவரங்களை புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வது மோசடிக்காரர்களுக்கு உதவியாக இருப்பதால் தனிப்பட்ட விவரங்கள் எதையும் சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம் என தெரிவிக்கின்றனர். வேலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மட்டும் ‘ஆன்லைன்’ மோசடி தொடர்பாக வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 1,524 புகார்கள் வந்துள்ளன. இதில், ‘ஆன்லைனில்’ மட்டும் ரூ.8 கோடியே 61 லட்சத்து 60 ஆயிரத்து 722 அளவுக்கு மோசடி செய்துள்ளது. இதில், 5 கோடியே 92 லட்சத்து 7 ஆயிரத்து 512 ரூபாய் பணம் மோசடி நபர்களின் வங்கிக் கணக்குகள் மூலம் முடக்கப்பட்டு, 12 லட்சத்து 87 ஆயிரத்து 816 ரூபாய் மட்டும் மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதையும் கவனிக்க வேண்டியுள்ளது. எனவே, சிறுக, சிறுக சேமித்த பணத்தை இழக்க வேண்டாம் என தெரிவிக்கின்றனர்.
ஆசை வார்த்தைக்கு ஏமாற வேண்டாம்... இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘பொதுமக்கள் தங்கள் வங்கிக்கணக்கில் இருந்து மர்ம நபர்கள் மோசடியாக பணம் எடுத்து விட்டால், உடனடியாக 1930 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கவேண்டும். அப்போதுதான், மர்ம நபர்கள் மோசடி செய்த பணத்தை வேறு வங்கிக் கணக்குக்கு மாற்றுவதற்குள் தடுக்க முடியும். ‘ஆன்லைனில்’ பகுதிநேர வேலை எனக்கூறி வரும் தகவல்களை நம்ப வேண்டாம். மோசடி திருடர்களின் ஆசைவார்த்தைக்கு ஏமாற வேண்டாம். படித்தவர்களே பெரும்பாலும் ‘ஆன்லைன்’ மோசடியில் சிக்கி பணத்தை இழப்பது பரிதாபம்’’ என தெரிவித்தனர்.