டேராடூன்: உத்தரபிரதேச மாநிலம் படாவுன் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் (25) உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அங்கு முகமது தய்யப் என்பவருடன் நெருங்கி பழகி உள்ளனர். ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார் தய்யப்.
இதனிடையே, தான் கருவுற்றிருப்பதை உணர்ந்த அந்தப் பெண், உள்ளூர் காவல் நிலையத்தில் தய்யப் மீது புகார் செய்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் கடந்த நவம்பர் 11-ம் தேதி தய்யபை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், அந்த இளம்பெண் தனது 4 மாத கருவைக் கலைக்க அனுமதி கோரி ரூர்க்கி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு கடந்த 12-ம் தேதி விசாரணைக்கு வர இருந்தது.
அன்றைய தினம் நீதிமன்றம் சென்றிருந்த அந்தப்பெண் தன்னிடம் இருந்த விஷ மருந்தை அருந்தி மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அந்தப் பெண்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.