க்ரைம்

ஆருத்ரா வழக்கில் ஆர்.கே.சுரேஷிடம் 2-வது நாளாக விசாரணை:வீடியோவாக பதிவு செய்துள்ளதாக தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு விவகாரம் தொடர்பான விசாரணைக்காக நடிகர் ஆர்.கே.சுரேஷ் 2-வது நாளாக நேற்றும் போலீஸாரின் விசாரணைக்கு ஆஜரானார். அவர் அளித்தபதில்கள் அனைத்தும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னை அமைந்தகரை மேத்தா நகரை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ‘ஆருத்ரா கோல்டு டிரேடிங்’ என்ற பெயரில் தனியார் நிதிநிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், தங்களிடம் ரூ.1 லட்சம்முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் வரை வட்டியாக வழங்கப்படும் எனக் கூறியது.

ரூ.2,438 கோடி மோசடி: இதை நம்பி பலர், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், அந்த நிறுவனம், 1 லட்சத்து 9,255 பேரிடம் ரூ.2,438 கோடி வரை பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தமிழக காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து அந்நிறுவன நிர்வாகிகளை அடுத்தடுத்து கைது செய்தனர். இந்த பண மோசடி வழக்கில்நடிகரும் பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷும் சிக்கினார். அவர்ஆருத்ரா தொடர்புடையவர்களிட மிருந்து ரூ.15 கோடி வரை பெற்றதாககுற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவரை விசாரணைக்காக அழைத்தபோது, அவர் தலைமறைவானார். இதையடுத்து, அவரை கைது செய்யசர்வதேச போலீஸாரின் உதவி நாடப்பட்டது.

இதுதொடர்பாக ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். மேலும், டிச.12-ம்தேதி போலீஸார் முன்னிலையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்ப தாக உறுதி அளித்தார். அதன்படி, துபாயிலிருந்து சென்னை திரும்பிய ஆர்.கே.சுரேஷ் நேற்று முன்தினம், அசோக் நகரில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் முன்னிலையில் ஆஜரானார். அவரிடம் 7 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், அவர் நேற்று 2-வதுநாளாக போலீஸார் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் ஏற்கெனவே கேட்ட சில கேள்விகளை மீண்டும் கேட்டுள்ளனர். மேலும், புதிதாக பல கேள்விகளையும் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. அதற்கு ஆர்.கே.சுரேஷ் அளித்த பதில்கள் அனைத்தும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடை பெற்று வருகிறது.

SCROLL FOR NEXT