கல்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே உள்ள நரசங்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் ஜமுனாராணி. இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்தபோது, மர்மநபர் ஒருவர் வீட்டில் புகுந்து அவரை மிரட்டி 7.5 பவுன் நகையைக் கொள்ளையடித்தார். இதேபோல், அதே பகுதியைச் சேர்ந்த ராணியம்மாள், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, சைக்கிளில் வந்த ஒருவர் 5 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பி சென்றார். இது தொடர்பாக, இருவரும் சதுரங்கப்பட்டினம் போலீஸில் புகார் அளித்தனர். மேலும், அதே பகுதியில் விலை உயர்ந்த சைக்கிள் ஒன்று திருடப்பட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதன்படி, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சதுரங்கப்பட்டினம் ரவுண்டான பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகிக்கும் வகையில் சைக்கிளில் வந்த நபரை போலீஸார் மடக்கி விசாரணை மேற்கொண்டனர். அவர், பிஹார் மாநிலத்தை சேர்ந்த அஜய்சிங் மகன் மஞ்சித்குமார்(31) என்பதும், கல்பாக்கம் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதும் தெரிந்தது. எனினும், போலீஸாரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக அவர் பதில் அளித்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
இதில், மஞ்சித்குமார் சைக்கிளில் சென்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸார், அவரது வீட்டின் பீரோவிலிருந்த 12.5 பவுன் திருட்டு நகைகள், 3 சைக்கிள்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர். மத்திய அரசு ஊழியர் ஒருவர், சைக்கிளில் சென்று நகைகளைக் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.