மதுரை: ரூ.100 கோடி மோசடி வழக்கில்,பிரணவ் ஜுவல்லரி உரிமையாளரை 7 நாட்கள் போலீஸ் காவலில்எடுத்து விசாரிக்க, மதுரை டான்பிட்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பிரணவ் ஜுவல்லரி என்ற பெயரில் நகைக் கடைகள் தொடங்கி, மாதாந்திர நகைசேமிப்பு திட்டம் நடத்தப்பட்டது.இந்நிலையில் வாடிக்கையாளர் களுக்கு பணம் திரும்ப அளிக்காமல் திடீரென கடைகள் மூடப்பட்டன.
இதுகுறித்து மதுரை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் மத்தியகுற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், ரூ.100 கோடி அளவுக்கு மோசடி கண்டு பிடிக்கப்பட்டதால், வழக்குதிருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸுக்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்களான மதன் செல்வராஜ், இவர் மனைவிகார்த்திகா ஆகியோர் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தனர்.
இந்நிலையில், மதுரை டான்பிட்நீதிமன்றத்தில் டிச.7-ல் மதன் செல்வராஜ் சரண் அடைந்தார். அவரை டிச.21 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் மதன் செல்வராஜை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார், மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஜோதி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மதன் செல்வராஜை டிச.18 வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதிஉத்தரவிட்டார். இதையடுத்து, மதன் செல்வராஜை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.