கோவை: கோவை நகைக்கடையில் நடந்த 575 பவுன் திருடப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த தலைமறைவாக இருந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை காந்திபுரம் நூறடி சாலையில் ஜோஸ் ஆலுக்காஸ் என்ற பிரபல நகைக்கடை உள்ளது. இக்கடை தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கொண்டதாகும். தரைத்தளம் மற்றும் 2-ம் தளம் வரை, தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி நகைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்தவுடன் ஊழியர்கள் கடையை பூட்டிச் சென்றனர். மறுநாள் 28-ம் தேதி காலை ஊழியர்கள் வந்து பார்த்தபோது, கடையின் காசாளர் மேஜை அருகே வைக்கப்பட்டிருந்த ஆதரவற்றோருக்கு பணம் திரட்டும் பெட்டி கீழே விழுந்து உடைந்து கிடந்தது. சந்தேகமடைந்த ஊழியர்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நகைகளின் இருப்பை சரி பார்த்தனர்.
அப்போது 575 பவுன் தங்க நகைகள், பிளாட்டினம், வைர மற்றும் 700 கிராம் வெள்ளி நகைகள் மாயமாகியிருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் விசாரித்தனர். கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதிகாலை நேரத்தில் இளைஞர் ஒருவர் உள்ளே நுழைந்து நகைகளை திருடிச்செல்வது பதிவாகியிருந்தது. இதுகுறித்து ரத்தினபுரி காவல்துறையினர் வழக்குப்பதிந்தனர். காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், துணை ஆணையர்கள் சந்தீஷ் மேற்பார்வையில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை காவலர்கள் பல்வேறு கோணங்களில் விசாரித்தனர்.
அடையாளம் தெரிந்தது: போலீஸாரின் விசாரணையில், திருட்டில் ஈடுபட்டவர் தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள தேவரெட்டியூரைச் சேர்ந்த விஜய் (25) என்பது தெரிந்தது. இதையடுத்து பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலையில் தங்கியிருந்த அவரை காவல் துறையினர் பிடிக்க முயன்ற போது தப்பினார். இத்திருட்டு சம்பவத்துக்கு திட்டமிட்டு உடந்தையாக இருந்ததாக விஜய்யின் மனைவி நர்மதா, திருடப்பட்ட நகைகளை பதுக்கி வைத்து உதவி புரிந்து நர்மதாவின் தாயார் யோகராணி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். நர்மதாவிடம் இருந்து 400 பவுன், யோகராணியிடம் இருந்து 125 பவுன் தங்கம் மற்றும் பிளாட்டினம், வைர நகைகள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தலைமறைவான விஜய்யிடம் மீதம் உள்ள நகைகள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து தலைமறைவான அவரை பிடிக்க தனிப்படையினர் கேரளா, கர்நாடகா, ஆனைமலை, மதுரை , தருமபுரி மற்றும் கோவையின் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையே, தருமபுரி வனப்பகுதியில் அவர் பதுங்கியிருந்த தகவலை அறிந்த காவல்துறையினர் அங்கு முகாமிட்டு தேடி வந்தனர். ஆனால், விஜய் அங்கிருந்து தப்பினார். அப்போது தனது உறவினர் வீட்டிலிருந்து 22 பவுன் நகை, லட்சக்கணக்கான பணத்தையும் திருடிச்சென்றது தெரிந்தது.
சென்னையில் பதுங்கிய விஜய்: இதையடுத்து, செல்போன் தொடர்புகள் மூலமும், தொழில்நுட்ப உதவிகளின் மூலம் காவல் துறையினர் விஜய்யை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, சென்னையில் உள்ள ஒரு இடத்தில் விஜய் பதுங்கியிருக்கும் தகவல் காவல் துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து தனிப்படைக் குழுவினர் சென்னைக்கு சென்று தகவல் கிடைத்த இடத்தில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு, அங்கு பதுங்கியிருந்த விஜயை நேற்று (டிச.10) இரவு பிடித்து கைது செய்தனர். காவல்துறையினரிடம் சிக்காமல் இருக்க தனது அடையாளத்தை மாற்றி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்த பக்தர் போல் மாறுவேடத்தில் அவர் இருந்துள்ளார். நகை திருட்டு சம்பவத்தில் பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும், தலைமறைவாக இருந்த காலங்களில் அவருக்கு உதவியாக இருந்தவர்கள் குறித்தும் அவரிடம் விசாரித்தனர்.
மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் கூறும்போது, ''கோவையில் தப்பிய விஜய், பல்வேறு இடங்களில் சுற்றிவிட்டு, ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாளஹஸ்திக்கு சென்றுள்ளார். அங்கு பதுங்கியிருந்த அவர் ஐயப்பன் கோயிலுக்கு மாலையிட்டு பக்தர் போல் மாறுவேடத்தில் சென்னைக்கு திரும்பியுள்ளார். அங்கிருந்து வேறு இடத்துக்கு தப்புவதற்குள் காவல் துறையினர் அவரை பிடித்துவிட்டனர். அவரிடம் இருந்தும் குறிப்பிட்ட கிராம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருட்டு வழக்கில் அவருக்கு பின்னணியாக இருந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.