திருநெல்வேலி அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் மரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்ககோரி, அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க காத்திருந்தனர். படம்: மு.லெட்சுமி அருண். 
க்ரைம்

நெல்லை அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மனு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் மரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு் கேட்டு, அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திருநெல்வேலி மாவட்டம் மேலத்திடியூரிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த சீனு என்ற மாணவர் முதலாமாண்டு ஏரோநாட்டிக்கல் பொறியியல் பட்டப்படிப்பு பயின்று வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்த அவர் கடந்த 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு சென்றிருந்தார்.

மீண்டும் கல்லூரிக்கு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் விடுதி அறையில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். சக மாணவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மாணவனின் தாயார் மற்றும் உறவினர்கள், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். மாணவரின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதுபோல், நாங்குநேரி வட்டம் பரப்பாடியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி மரணம் அடைந்தார்.

அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தேவேந்திரகுல வேளாளர் பருத்திக்கோட்டை நாட்டார்கள் சமுதாய நலச்சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT