கோவை: கோவை நகைக்கடையில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக, மேலும் 125 பவுன் நகையை போலீஸார் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக திருட்டில் ஈடுபட்டவரின் மாமியாரையும் போலீஸார் கைது செய்தனர்.
கோவை காந்திபுரம் நூறடி சாலையில், ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை உள்ளது. கடந்த நவம்பர் மாதம் 28-ம் தேதி நள்ளிரவில் நகைக் கடைக்குள் நுழைந்த நபர் ஒருவர், கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 575 பவுன் நகைகளை திருடிச் சென்றார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ரத்தின புரி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீஸாரின் விசாரணையில், தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள தேவரெட்டியூரைச் சேர்ந்த விஜய் (25) என்பவர் இத்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவர் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலையில் குடும்பத்துடன் வசித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரைப் பிடிக்க போலீஸார் முயன்றனர். ஆனால், போலீஸார் நெருங்குவதை அறிந்த அவர் வீட்டிலிருந்து தப்பிச் சென்றார். மேலும், திருட்டு சம்பவத்துக்கு உதவிய விஜயின் மனைவி நர்மதாவை போலீஸார் கைது செய்து 400 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே, தலைமறை வான விஜயை பிடிக்கும் பணியையும், நகைகளை கண்டறியும் பணியையும் தீவிரப்படுத்தினர். தனிப்படை போலீஸார் அரூருக்கு சென்று அங்குள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த நர்மதாவின் தாய் யோக ராணியிடம் (48) விசாரித்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 125 பவுன் நகையை போலீஸார் மீட்டனர்.
இது குறித்து போலீஸார் கூறும்போது, ‘‘நகைகளை பதுக்கி வைத்ததாக விஜயின் மாமியார் யோக ராணி கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டருகே உள்ள சாக்கடை கழிவு குவியல், குப்பைத் தொட்டி ஆகிய இடங்களிலும், ஓசூர் நெடுஞ்சாலையில் ஒரு இடத்தில் குழியைத் தோண்டியும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 125 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்னும் 200 கிராம் நகை மீட்கப்பட வேண்டியுள்ளது.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி விஜய் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. தனிப் படையினர் வெளியூர் களில் முகாமிட்டு தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்’’ என்றனர்.