ராகேஷ் 
க்ரைம்

பொன்னேரி அருகே ரவுடி கொலை: முன்விரோதம் காரணமாக கொன்றதாக 3 பேர் கைது

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: பொன்னேரி அருகே முன்விரோதம் காரணமாக ரவுடியை கொலை செய்த 3 பேர் கைது செய்யபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மெதூர் ஊராட்சி அருகே நேற்று முன்தினம் இரவு பழவேற்காடு சாலையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக பொன்னேரி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று பார்த்த போது, இறந்தவரின் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில், உடல் தனியாகவும், தலை தனியாகவும் கிடந்தது.

முதல்கட்ட விசாரணையில், மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், ஓர் இளைஞரின் கைகளை பின்புறம் கட்டி, அவரை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்ததில், கொலை செய்யப்பட்டவர் மீஞ்சூர் அருகேயுள்ள மௌத்தம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் (26) என்பதும், அவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

பின்னர், ராகேஷின் உடலை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ராகேஷை கொலை செய்தது தொடர்பாக மேலூர் அம்பேத்கர் நகர் ஜோசப் தெருவை சேர்ந்த பரந்தாமன் மகன் நேதாஜி (26), தேவம்பட்டு சேகன்யம் கிராமத்தைச் சேர்ந்த கோபால் மகன் அபினேஷ் (22), ஆசானபுதூர் எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் அஜய் (22)ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

2021-ல் நேதாஜியின் மாமா ராஜேஷ் என்பவரது மோட்டார் சைக்கிளில் இருந்து ராகேஷ் பெட்ரோல் திருடி உள்ளார். இதைத் தட்டிக் கேட்ட ராஜேஷை, அவர் வெட்டிக் கொலை செய்துள்ளார். இதற்கு பழிவாங்கும் நோக்கில் தற்போது நேதாஜி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ராகேஷை கொலை செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT