சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தேடப்படும் நபரான நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷூக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக்-அவுட் நோட்டீஸை நிறுத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி சுமார் ஒரு லட்சம் பேரிடமிருந்து ரூ.2,438 கோடி வசூலித்து மோசடி செய்ததாக, ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் உள்பட 21 பேருக்கு எதிராக பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த பணமோசடியில் நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளரும், பாஜக மாநில ஓபிசி பிரிவு துணைத் தலைவருமான ஆர்.கே.சுரேஷூக்கும் தொடர்புள்ளதாக கூறி அவருக்கு போலீஸார் சம்மன் பிறப்பித்துள்ளனர். அவர் தனது மனைவியுடன் துபாய்க்கு சென்ற நிலையில், அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்த லுக்-அவுட் நோட்டீஸை திரும்ப பெறக் கோரி ஆர்.கே.சுரேஷ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பண மோசடிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. வரும் டிச.10 -ம் தேதி துபாயில் இருந்து சென்னை வரவுள்ளதால் லுக்-அவுட் நோட்டீஸை திரும்பப் பெற வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்துமீரான், ‘‘மோசடி வழக்கில் இருந்து முக்கிய குற்றவாளிகளை காப்பாற்றுவதாகவும், முக்கிய புள்ளிகளுக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளது எனக் கூறியும் இந்த வழக்கில் கைதாகியுள்ள ரூசோ என்பவரிடம் இருந்து ரூ.12.5 கோடியை ஆர்.கே.சுரேஷ் பெற்றுள்ளார். இதுதொடர்பாக போலீஸார் விசாரணையை தொடங்கியதும் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அதனால்தான் அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
அதையடுத்து நீதிபதி, ‘‘மனுதாரரான ஆர்.கே.சுரேஷ் டிச.12-ம் தேதி போலீஸாரின் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை அவரை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் உயர் நீதிமன்றத்தின் முன்அனுமதி பெற வேண்டும். மேலும், அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக்-அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டு, விசாரணையை டிச.18-ம் தேிக்கு தள்ளி வைத்துள்ளார்.