கோவை: கோவையில் நகைக் கடையில் திருடப்பட்ட 400 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருட்டு வழக்கில் தொடர்புடையவரை போலீஸார் சுற்றிவளைத்தபோது, ஓட்டைப் பிரித்து தப்பியோடினார். உடந்தையாக இருந்த அவரது மனைவி கைது செய்யப்பட்டார்.
கோவை காந்திபுரம் 100 அடிசாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 28-ம்தேதி நகைகள் திருடப்பட்டது தொடர்பாக 5 தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர் விசாரணையில், திருட்டில் ஈடுபட்டவர் தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள தேவரெட்டியூரைச் சேர்ந்த விஜய்(25) என்பதும், அவர் மீது தருமபுரி, கோவையிலும் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளதும் தெரிந்தது. மேலும், பொள்ளாச்சி அருகேஉள்ள ஆனைமலையில் குடும்பத்துடன் விஜய் தங்கியிருப்பதை போலீஸார் கண்டறிந்தனர்.
அவரைப் பிடிக்க போலீஸார் அங்கு சென்றனர். இதையறிந்த விஜய், வீட்டின் மேற்கூரை ஓட்டைப்பிரித்து வெளியே வந்து, தப்பியோடினார். வீட்டிலிருந்த அவரது மனைவி நர்மதாவிடம் போலீஸார் விசாரித்தனர். தொடர்ந்து வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விஜய் 175 பவுன் நகைகளுடன் தப்பியது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "குற்ற வழக்கில் கைதாகி, கோவை மத்திய சிறையில் விஜய் இருந்தபோது, கைதி ஆனைமலை சுரேஷுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், ஆனைமலைக்கு குடிபெயர்ந்த விஜய், தனது மனைவி நர்மதாவுடன் இணைந்து நகைக்கடையில் திருடியுள்ளார். அவரைத் தேடி வருகிறோம்" என்றனர்.
மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘கடையில் 575 பவுன் நகைகளும்,700 கிராம் வெள்ளிப் பொருட்களும் திருடப்பட்டுள்ளன. விஜய் மனைவியிடம் இருந்து 400 பவுன் தங்க நகைகள் மற்றும் வைரம், பிளாட்டினநகைகள் பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளன. அவருக்கு உடந்தையாக இருந்ததால் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சுரேஷுக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரித்து வருகிறோம்’’ என்றார்.