படம்: ஜெ.மனோகரன் 
க்ரைம்

கோவை நகைக்கடையில் 200 பவுன் திருட்டு: தனிப்படையினர் கேரளாவில் முகாம்

செய்திப்பிரிவு

கோவை: கோவை நகைக்கடையில் 200 பவுன் திருடப்பட்ட வழக்கு தொடர்பாக, குற்றவாளியை தேடி தனிப்படை காவலர்கள் கேரளா, பொள்ளாச்சி, உடுமலை, பழநி உள்ளிட்ட இடங்களில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் கடந்த 28-ம் தேதி அதிகாலை ஏ.சி வென்டிலேட்டர் வழியாக நுழைந்த மர்ம நபர், 200 பவுன் நகையை திருடிச் சென்றார். இது தொடர்பாக கடையின் மேலாளர் ஆல்டோ ஜேக்கப் அளித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய மர்ம நபர்களை பிடிக்க மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை காவலர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், கடையில் இருந்து நகையை கொள்ளையடித்துக் கொண்டு வெளியே வந்த நபர், தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி அங்கேயே போட்டுவிட்டு, வேறொரு சட்டையை அணிந்து கொண்டு ஆட்டோவில் ஏறி சென்றது தெரியவந்தது.

சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் நடத்திய ஆய்வில், அவர் உக்கடம் நோக்கி செல்வதும், பின்னர் பொள்ளாச்சி செல்லும் பேருந்தில் ஏறிச் செல்வதும் உறுதியானது. இதையடுத்து, தனிப்படை காவலர்களில் ஒரு பிரிவினர் பொள்ளாச்சியில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர். ரகசிய தகவல்களின் அடிப்படை யில் உடுமலை, பழநி, கேரளா ஆகிய பகுதிகளுக்கும் தனிப்படை காவலர்கள் சென்றுள்ளனர்.

மேலும், கடையில் பணிபுரியும் ஊழியர்கள், சமீபத்தில் வேலையை விட்டு நின்றவர்கள், கடையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வந்தவர்கள், பழைய குற்றவாளிகளுக்கு ஏதேனும் இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. இதற்கிடையே, நகைக்கடையில் என்னென்ன நகைகள் திருட்டு போனது என்ற விவரங்கள் நேற்று தெரியவந்தது.

8 வைர மோதிரங்கள், 5 வைர தாலிக் கொடிகள், 1 வைர நெக்லஸ், 2 வைர கைச்செயின், 3 ஜோடி வைர கம்மல், 1 வைர டாலர், 2 பிளாட்டினம் செயின், 12 பிளாட்டினம் கைச்செயின், 35 தங்கசங்கிலிகள், 7 தங்க வளையல்கள், 25 தங்க கைச்செயின்கள், 21 தங்க நெக்லஸ்கள், 30 கல் பதித்த தங்க நெக்லஸ்கள், 27 தங்க கைச்செயின்கள், 18 காரட் தங்கச்சங்கிலி 6, 4 வளையல்கள், 4 தங்க டாலர்கள், 18 தங்க தாலிக் கொடிகள், 21 மோதிரங்கள், 3 ஜோடி தங்க கம்மல்கள், 4 கல் பதித்த தங்க மோதிரம் ஆகியவை திருட்டு போயுள்ளன.

இது குறித்து தனிப்படை காவல் துறையினர் கூறும் போது, ‘‘திருட்டு தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது. சில தடயங்கள் கிடைத்துள்ளன. குற்ற வாளியை விரைவில் பிடித்து விடுவோம்’’ என்றனர்.

SCROLL FOR NEXT