பிரதிநிதித்துவப் படம். 
க்ரைம்

மதுரையில் பிஹார் தொழிலாளி படுகொலை; மற்றொருவர் படுகாயம்: போலீஸ் விசாரணை

செய்திப்பிரிவு

மதுரை: மதுரையில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் படுகாயங்களுடன் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையின்படி செல்போனுக்காக இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில், "பிஹாரைச் சேர்ந்தவர் சுபாஷ் (21). இவர் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்டார். இவருடன் வந்த சானி (21) என்ற இளைஞர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுபாஷும், சானியும் தோப்பூர் அருகே கட்டுமானப் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தனர். அவர்கள் நேற்றிரவு (நவ.28) மலிகைப் பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவர்களிடமிருந்து செல்போன் பறிக்க முயன்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலில் மர்ம நபர்கள் சுபாஷை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். மற்றொரு நபரான சானி படுகாயமடைந்துள்ளார். அவர் தற்போது ராஜாஜி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றவாளிகளைப் பிடிக்கும்வரை இறந்த தொழிலாளியின் உடலை வாங்குவதில்லை என்று சக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையில், குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT