க்ரைம்

பெருமாநல்லூர் ஊராட்சி துணைத் தலைவர் உட்பட 10 பேர் மீது வன்கொடுமை வழக்கு

செய்திப்பிரிவு

திருப்பூர்: தொழிலாளி கூறிய புகாரின் பேரில் பெருமாநல்லூர் ஊராட்சி துணைத் தலைவர் உட்பட 10 பேர் மீது போலீஸார் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெருமா நல்லூர் ஆதி திராவிடர் காலனியை சேர்ந்த கூலித் தொழிலாளி சின்னசாமி (40), பெருமா நல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனு விவரம்: நான் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவன். எனது மூதாதையர் வாழ்ந்து வந்த வீட்டில், குடும்பத்துடன் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன்.

கடந்த 20-ம் தேதி, நான் குடியிருக்கும் வீடு பெருமாநல்லூர் ஊராட்சிக்கு சொந்தமானது எனக் கூறி, வீட்டை இடிக்க ஊராட்சி துணைத் தலைவர் வேலுச்சாமி, பொக்லைன் இயந்திரத்துடன் வந்தார். அப்போது வீட்டின் முன்பு இருந்த விறகுகளை அப்புறப்படுத்தினார். அப்போது, குடியிருக்கும் வீட்டை எதற்காக இடிக்கிறீர்கள்? என்று கேட்டேன்.

அப்போது ‘கலைஞர் உரிமைத் தொகை விண்ணப்பம் இந்த இடத்தில் வைத்து தர உள்ளோம்’ என்றார். இதையடுத்து எங்கள் பகுதியை சேர்ந்தவர்களுக்கு தகவல் அளித்தேன். அவர்களுடன் பெருமா நல்லூர் போலீஸாரிடம் புகார் அளிக்க வந்தேன். காவல் ஆய்வாளர் இல்லாததால் மறுநாள் வர திட்டமிட்டேன்.

மறுநாள் வந்த துணைத் தலைவர் வேலுச்சாமி மற்றும் அவரது ஆட்கள் வீட்டை இடிக்க முற்பட்டதுடன், என்னையும் தாக்க வந்தனர். இது தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வேலுச் சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து வன்கொடுமை தடுப்பு ( எஸ்சி / எஸ்டி ) சட்டப் பிரிவுகளின் கீழ், வேலுச்சாமி உட்பட 10 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT