செங்கல்பட்டு: விழுப்புரம் மாவட்டத்தில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா சின்ன பாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராயன் என்பவரது மகன் மைக்கேல். இவர் சென்னை பெருங்குடி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தார். துரைப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 5 வயது சிறுமியை கடந்த 2016-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் துரைப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் மைக்கேலை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி தமிழரசி முன்பு நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மைக்கேல் குற்றவாளி என உறுதியானதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 15,000 அபராதமும் விதித்து நீதிபதி தமிழரசி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 2.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.