விருத்தாசலம்: மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் கண்டறிய 'ப்ரீத் ஆல்கஹால் அனலைசர்' கருவி உள்ளது. ஆனால், கஞ்சா போதையில் வாகனங்களை ஓட்டினால் கண்டறிய கருவி இல்லாமல் போலீஸார் திணறி வருகின்றனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் பள்ளிகள், கல்லூரிகளை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்வதை தடுக்க உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சுகாதாரத்துறை மூலம் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்த புகார்களை 'TN Food Safety Consumer App' வாயிலாகவும், 9444042322 என்னும் எண்ணுக்கும் வாட்ஸ்அப் வாயிலாகவும் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போதையை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் இளைஞர்கள் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் கஞ்சா புகைத்து, மது போதையில் தள்ளாடி காவல்துறையினரிடம் தொடர்ந்து ரகளையில் ஈடுபடுவது வாடிக்கையாக வருகிறது.
மக்கள் அதிகம் புழங்கக் கூடிய விருத்தாசலம் கடைவீதியில் அண்மையில் இளைஞர் ஒருவர் , சாலையின் நடுவே நின்று கொண்டு அரை மணி நேரத்துக்கும் மேலாகசிகரெட்டில் கஞ்சாவை திணித்து புகைத்துள்ளார். அவ் வழியே செல்வோரிடம் சில்மிஷத்திலும் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த விருத்தாசலம் காவல் துறையினர், அங்கு சென்று தள்ளாடிக்கொண்டிருந்த அந்த நபரை பிடித்து தட்டிக் கேட்டனர். ஆனால் அந்த போதை ஆசாமியோ, போலீஸாரின் கேள்விகளை பொருட்படுத்தாமல், மீண்டும் புகை பிடித்துள்ளார். அதேபோன்று கடைவீதியின் மற்றொரு இடத்தில் இரு இளைஞர்கள் மது போதையில் காவலர்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
அங்குள்ள பொதுமக்கள் சிகரெட்டில் கஞ்சா பயன்படுத்தி அந்த இளைஞர் புகை பிடிப்பதாக என குற்றம் சாட்டிய போதிலும், அவர்களை போலீஸார் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் செல்ல தயக்கம் காட்டியுள்ளனர். தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவோர், பதுக்குவோர், விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும், ஊரகப் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி தான் வருகின்றன. அண்மையில் கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம், மாவட்டத்தைக் கஞ்சா இல்லா மாவட்டமாக மாற்றவேண்டும் என காவல் ஆய்வாளர்களுக்கு உத்தரவுப் பிறப்பித்ததுள்ளார். மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ததாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கஞ்சா புகைத்துக் கொண்டு பொதுமக்களிடம் அநாகரீகமாக நடந்துகொள்ளும் போதை நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து, கடலூர் எஸ்பி ராஜாராமனிடம் கேட்டபோது, "கஞ்சா உட்கொள்ளும் நபரை பிடித்தால், அவரை மறுவாழ்வு இல்லத்துக்கு தான் அனுப்ப இயலும். கைதுசெய்ய முடியாது. அதனால் கஞ்சாவை விற்பனை செய்யும் நபர்களை கைது நடவடிக்கைக்கு உட்படுத்துகிறோம். அதேநேரத்தில் கஞ்சா உட்கொண்டு, அவர் குறிப்பிட்ட அளவுக்கு மேல் கஞ்சா வைத்திருந்தால், அவரை கைது செய்ய முடியும். மேலும் பொது இடத்தில் சிகரெட் பிடித்தால் சுகாதாரத்துறையினர் அபராதம் விதிப்பது போல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு அபராதம் விதிப்பது போன்று காவல்துறையினர் அபராதம் விதிக்கின்றனர்" என்றார். கஞ்சா உட்கொண்டு வாகனம் ஓட்டுபவரை பரிசோதிக்க இயலாததால் அவரை தண்டிக்கவோ அபராதம் விதிக்கவோ வழியில்லாமல் கையைப் பிசைந்து நிற்பதாக காவலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பல்வேறு குற்றச்செயல்களுக்கு தூண்டுதலாக அமையும் கஞ்சாவை உட்கொண்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள், போதை காரணமாக செய்த தவறால், அது தவறாகக் கருதப்படாமல் தப்பிக்கவும் வழியுண்டு. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை உட்கொண்டாலே அவர்களை கடுமையான சட்டம் மூலம் தண்டிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கஞ்சாவை ஒழிப் போம் எனக் குரல் எழுப்புவதை காட்டிலும், கஞ்சாவுக்கு கடிவாளம் போடும் வழிமுறையை அரசு ஆராய்ந்தால் மட்டுமே அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியும். கஞ்சா உட்கொண்டாலே அவர்களை கடுமையான சட்டம் மூலம் தண்டிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.