க்ரைம்

"பிடிக்காத பாடத்தில் சேர்த்து விட்டீர்கள்" - தற்கொலை செய்துகொண்ட அண்ணா பல்கலை. மாணவி கடிதம்

செய்திப்பிரிவு

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ஸ்டீபன் டேவிட். இவரின் மகள் சரோஜ் பெனிட்டா (21), சென்னை அண்ணா பல்கலை விடுதியில் தங்கி, கட்டிடக் கலை (பி.ஆர்க்) 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் விடுதி அறையில் சரோஜ் பெனிட்டா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கோட்டூர்புரம் போலீஸார் நடத்திய விசாரணையில், சரோஜ் பெனிட்டாவுக்கு அதிக அரியர்கள் இருந்ததாகவும், இதனால், மன அழுத்தம் ஏற்பட்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர். மேலும், மாணவி, அவரது பெற்றோருக்கு எழுதிய கடிதம் ஒன்றை அவரது அறையில் கைப்பற்றியதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

அந்த கடிதத்தில், ‘நீங்கள் எனக்கு பிடிக்காத படிப்பில் சேர்த்து விட்டீர்கள். உங்களுக்காகப் படித்தேன். ஆனால், தற்போது என்னால் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. நீங்கள் என்னை கட்டாயப் படுத்தி இந்த படிப்பில் சேர்த்து விட்டதால் இந்த உலகத்தை விட்டு செல்கிறேன்’ என குறிப்பிட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மாணவி தற்கொலை குறித்து, போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனநல ஆலோசகர் கருத்து: சிறு பிரச்சினைகள், தோல்வியைக் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தற்போது அதிகரித்து வருகிறது. இது குறித்து, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை முன்னாள் இயக்குநரும், மனநல மருத்துவருமான பேராசிரியர் பூர்ண சந்திரிகா கூறியதாவது: இளம் வயதினர் தங்களுக்கு இருக்கும் கஷ்டத்தை மற்றவர்களுக்கு சொல்ல பயன்படுத்தும் மொழி தற்கொலையாக இருக்கிறது.

உதவிக்கான குரல் ஒரு போதும் தற்கொலையாக இருக்கக் கூடாது. உதவிக்கான குரல் என்பது மற்றவர்களிடம் மனம் விட்டு பேசுவது தான். தோல்வியடைந்தவர்களை தனிமைப்படுத்தக் கூடாது. உடன் இருப்பவர்கள் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பேச வேண்டும். வாழ்க்கையில் தோல்வி என்பது சகஜமானது. இதையும் கடந்து செல்லும் மன நிலைக்கு மாணவர்கள் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சர்ச்சையாகும் தற்கொலைகள்: இதற்கிடையே, உயர் கல்வி நிறுவனங்களில் நிகழும் தற்கொலை சம்பவங்கள் மட்டும் சர்ச்சையாவது குறித்து சமூக ஆர்வலர் கே.பாபு கூறும் போது, ‘‘ஐ.ஐ.டி-யில் மாணவர்கள் தற்கொலை முடிவெடுக்க பெரும்பாலும் ஐஐடிகளின் வளாகச் சூழல்களே காரணமாக அமைகின்றன.

அதே நேரம் அண்ணா பல்கலை. உட்பட இதர உயர் கல்வி நிறுவனங்களில் இத்தகைய சூழல்கள் இருப்பதில்லை. மேலும், கல்வி நிலையம் என்பது அனைத்து தரப்பினருக்கு மானதாக இருக்க வேண்டும். அதன் காரணமாகவே ஐ.ஐ.டி-கள் மீது அதிக கேள்விகள் எழுகின்றன. எந்த கல்வி நிறுவன மானாலும் மாணவர்கள் தற்கொலை தவிர்க்கப்பட வேண்டியது அவசியம்’’ என்றார்.

SCROLL FOR NEXT