சென்னை: சென்னை யானைகவுனியில் உருக்குவதற்காகக் கொடுத்த தங்கக் கட்டியுடன் மாயமானதாக நகைப்பட்டறை ஊழியரை போலீஸார் கைது செய்தனர். சென்னை, கொடுங்கையூர் பகுதியில் வசித்து வருபவர் லோகநாதன் (41). இவர் யானைகவுனி, ஏலகந்தப்பன் தெருவில் தங்க நகை செய்யும் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவர், அண்மையில் பூக்கடை காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், ``தனது கடையில் பணிபுரிந்த விழுப்புரத்தைச் சேர்ந்த ஆனந்த் (37) என்பவரிடம் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி, 65 கிராம் எடை கொண்ட தங்கக் கட்டியை கொடுத்து, அதை உருக்கி, தங்கக் கம்பிகளாக மாற்றி வர அனுப்பினேன்.
ஆனால், அவர் வெகுநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. அவரை தேடியபோதுதான் ஆனந்த் தங்கக் கட்டியுடன் தலைமறைவானது தெரியவந்தது. எனவே, அவரைக் கண்டுபிடித்து எனது தங்கக் கட்டியை மீட்டுத் தர வேண்டும்'' எனப் புகாரில் தெரிவித்து இருந்தார். இப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த நகைக்கடை ஊழியர் ஆனந்தை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடமிருந்து 64.3 கிராம் எடை கொண்ட தங்கக் கட்டி பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.