விருத்தாசலம்: திட்டக்குடி அருகே கஞ்சா போதையில், தாயைக்கொன்று புதைத்து விட்டு நாடகமாடிய மகனை போலீஸார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் ஆவினன்குடி அருகே தொளார் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ராஜேந்திரன் - கஸ்தூரி (50). இவர்களுக்கு இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். இரு மகள்களுக்கும் திருமணமான நிலையில், மகன்கள் சேவாக் மற்றும் செல்வமணி ஆகியோர் பெற்றோருடன் வசித்து வந்தனர். இதில், செல்வமணி தற்போது தனது தந்தை ராஜேந்திரனுடன் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார். தாய் கஸ்தூரியும், சேவாக்கும் தொளார் கிராமத்தில் வசித்து வந்தனர்.
இதனிடையே, கடந்த ஓராண்டுக்கு முன் சமய புரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை சேவாக் காதல் திருமணம் செய்தார். அவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி சமயபுரத்துக்குச் சென்று விட்டார். சேவாக் தன் தாயாருடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த இரு நாட்களாக சேவாக்அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் தனது தாயார் கஸ்தூரியை காணவில்லை என்று கூறி, தேடியுள்ளார். இதையடுத்து, சேவாக்கின் மாமா, கஸ்தூரியின் வீட்டுக்குச் சென்று பார்த்த போது, அங்கு துர்நாற்றம் வீசியது. சேவாக்கிடம் இதுபற்றி கேட்க, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.
சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள்,ஆவினன்குடி காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார், வீட்டின் உள்ளே தோண்டி பார்த்தனர். அங்கு கஸ்தூரியின் உடல் புதைக்கப்பட்டிருந்தது. உடலை தோண்டியெடுத்து, உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின் சேவாக்கை காவல் நிலையம் அழைத் துச் சென்று, போலீஸார் விசாரணை நடத்தினர். கடந்த 6 மாதங்களுக்கு முன் கால் முறிவு ஏற்பட்டு, வீட்டில் இருந்ததாகவும், தற்போது குணமான நிலையில், வேலைக்குச் சென்றபோது வேலை கிடைக்கவில்லை.
அதனால் தான் மதுமற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி விட்டதாகசேவாக் தெரிவித்துள்ளார். கஞ்சா வாங்க கஸ்தூரி யிடம் பணம் கேட்டபோது, அவர் தர மறுத்த ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்து, உடலை யாருக்கும் தெரியாமல் வீட்டின் உள்ளேயே குழிதோண்டி புதைத்துள்ளதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். சேவாக்கை கைது செய்த, ஆவினன்குடி காவல்நிலையத்தினர் தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.