கோவை: கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படிக்கும் 2-ம் ஆண்டு மாணவருக்கு ராகிங் செய்து தாக்கியதாக சீனியர் மாணவர்கள் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை - திருச்சி சாலை சூலூரில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் பி.இ மெக்கட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்து அவர் வகுப்புக்குச் சென்று வந்தார். அவருடன் 12 மாணவர்கள் அதே வகுப்பில் படிக்கின்றனர். இந்நிலையில், 2-ம் ஆண்டு படிக்கும் 18 வயது மாணவர், கடந்த 22-ம் தேதி கல்லூரி விடுதியில் இருந்தார். அப்போது பி.இ.மெக்கட்ரானிக்ஸ் 4-ம் ஆண்டு படிக்கும் சீனியர் மாணவர்கள் விடுதிக்கு வந்தனர். அவர்கள் விடுதியில் இருந்த மாணவர்களிடம், சீனியர் முன் கால் மேல் கால் போட்டு அமரக் கூடாது, முழுக்கை சட்டை அணிய வேண்டும், சீனியர் மாணவர்கள் வந்தால் மரியாதை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினர். இது பிடிக்காத அந்த 18 வயது மாணவர் அங்கிருந்து வெளியே சென்றார். இதனால் அவர் மீது சீனியர் மாணவர்கள் ஆத்திரமடைந்தனர்.
அதைத் தொடர்ந்து, அந்த 2-ம் ஆண்டு மாணவர் மற்றும் அவருடன் படிக்கும் 12 மாணவர்களை கல்லூரிக்கு வெளியே உள்ள அறைக்கு சீனியர் மாணவர்கள் வரவழைத்து எச்சரித்தனர். தொடர்ந்து அந்த 18 வயது மாணவரை தவிர, அவருடன் படிக்கும் மற்ற 12 மாணவர்களையும் கல்லூரிக்கு அனுப்பினர். அங்கிருந்த சீனியர்கள், அந்த 18 வயது மாணவரை, சூலூரில் உள்ள டீக்கடையில் வேலைப் பார்க்கும் நண்பரின் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து மூவரும் அந்த 18 வயது மாணவரை தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் அந்த மாணவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதனால், பயந்து போன அந்த மாணவர், கல்லூரி வார்டனிடம் தகவல் தெரிவித்துவிட்டு, சூலூர் போலீஸாரிடம் நடந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார்.
3 பேர் கைது: தன்னை ராகிங் செய்து மிரட்டி, தாக்கிய சீனியர் மாணவர்கள் மற்றும் டீக்கடை ஊழியர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தார். அதன் பேரில், சூலூர் போலீஸார் ராகிங் தடுப்புச் சட்டம், தகாத வார்த்தைகளில் திட்டுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மூவர் மீது வழக்குப் பதிந்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.
கோவை அவிநாசி சாலை, பீளமேட்டில் உள்ள ஒரு கல்லூரியில் சமீபத்தில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவரை சீனியர் மாணவர்கள் மொட்டையடித்து, நிர்வாணப்படுத்தி ராகிங் செய்த புகார் எழுந்தது. இது தொடர்பாக 5-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இச்சூழலில், கோவையில் மற்றொரு கல்லூரியில் ராகிங் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ராகிங் சம்பவங்களைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகளை போலீஸார், கல்லூரி நிர்வாகத்தினர் தீவிரப்படுத்த வேண்டும் என சமூக செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.