க்ரைம்

நர்சிங் மாணவி மர்ம மரணம்: ராமநாதபுரம் போலீஸ் விசாரணை

செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: காதலனுடன் வசித்து வந்த நர்சிங் மாணவி திடீரென உயிரிழந்தது குறித்து, ராமநாதபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்தவர் தாமோதரன். ஆட்டோ ஓட்டுநரான இவர், தற்போது ராமநாதபுரம் வீரபத்திர சாமி கோயில் தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரின் கடைசி மகள் ஹரிணி (17), ராமநாதபுரம் தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி சுற்றுலா செல்வதாக வீட்டில் கூறி விட்டுச் சென்ற ஹரிணி, ஒரு வாரத்துக்கு மேலாகியும் வீடு திரும்பவில்லை.

அவரின் மொபைல் போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அதன்பின், நேற்று முன்தினம் (நவ. 22) தாமோதரனுக்கு போன் செய்த ஒருவர், ஹரிணி இறந்துவிட்டதாகவும், உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த தாமோதரன் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்குச் சென்று, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட ஹரிணியின் உடலை பெற்றுச் சென்றனர். விசாரித்ததில், ஹரிணி திருவாடனை அருகே ஓரியூரைச் சேர்ந்த பாபு மகன் ஹரிஹரசுதன் என்பவரை காதலித்து வந்ததாகவும், இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு சாயல்குடியில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஹரிணி உடல் நிலை சரியில்லாமல் வாந்தி எடுத்ததாகக் கூறி, ஹரி ஹரசுதன் மருத்துவமனையில் சேர்த்த போது அவர் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தாமோதரன் தனது மகள் ஹரிணி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக, ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸில் புகார் அளித்தார். அதனடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT