சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜா (33). இவர் அப்பகுதியில் உள்ள 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருடன் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தார். அந்த பெண்ணின் பேத்தியான 11 வயது சிறுமியை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜா பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்து குறைப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் கூலித்தொழிலாளி ராஜா மற்றும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை மறைத்ததாக சிறுமியின் தாயார் உள்ளிட்ட 3 பெண்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி,குற்றம் சாட்டப்பட்ட ராஜாவுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனைமற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். வழக்கில் இருந்து 3 பெண்களையும் விடுதலை செய்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழகஅரசு ரூ.15 லட்சத்தை இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.