க்ரைம்

சென்னையில் ஒரே வாரத்தில் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சினிமா பைனான்சியர் மகன் உட்பட சென்னையில் ஒரே வாரத்தில் 23 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் கட்டுப்படுத்த காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

அதன்படி, சென்னையில் கடந்த 1.01.2023 முதல் 15.11.2023 வரையில் 11 மாதத்தில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொதுஅமைதிக்குப் பங்கம் விளைவித்தவர்கள், திருட்டு, நகை பறிப்பு, வழிப்பறி, பண மோசடி, போதைப் பொருட்கள் கடத்தல், சைபர் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என மொத்தம் 588 பேர் குண்டர் தடுப்பு காவல்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 09.11.2023 முதல் 15.11.2023 வரையிலான ஒரு வார காலத்தில் மட்டும் 23 பேர் இதே சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், முக்கியமாக தி.நகரில் வசிக்கும் சினிமா பைனான்சியர் முகுன்சந்த் போத்ராவின் மகன்ககன் போத்ரா (35) கைதாகியுள்ளார். தி.நகரில் உள்ள ஒரு பங்களாவீட்டை அபகரிக்க முயன்ற குற்றத்துக்காக மத்திய குற்றப்பிரிவில் உள்ள மோசடி புலனாய்வுப் பிரிவு போலீஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இதேபோல் ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் பிடிபட்ட ரவுடி கருக்கா வினோத் (42) உட்பட 23 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT