மதுராந்தகம்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அன்னம் சாய் வெங்கடசக்தி, சாய் சக்தி ஆகிய இருவர் 3-ம் ஆண்டு படித்து வந்தனர். கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்த இருவரும், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருவள்ளூரில் உள்ள தனியார் நிறுவனத்தில், இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து புதுச்சேரிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வாடகைக்கு இரு சக்கரம் வாகனம் வழங்கிய நிறுவனத்தில் இருந்து அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. திருவள்ளூர் மற்றும் சென்னை செல்வதாகக் கூறிவிட்டு, பாண்டிச்சேரி சென்றதன் காரணம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது.
இந்நிலையில், கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனத்தை புதுச்சேரியில் நிறுத்திவிட்டு, நேற்று முன்தினம் ரயிலில் வந்ததாக தெரிகிறது. ஆனால், செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ரயில் நிலையம் அருகே மர்மமான முறையில் இருவரும் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்த செங்கல்பட்டு ரயில்வே போலீஸார், உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை: மேலும், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததற்கான அடையாளங்கள் உடலில் காணப்படுகின்றன.மேலும், இருவரும் எந்த ரயில் வந்தார்கள், ரயிலில்இருந்து தவறி விழுந்தார்களா அல்லது தற்கொலைசெய்து கொண்டார்களா என ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.