கேளம்பாக்கம்: படூர், கேளம்பாக்கம், புதுப்பாக்கம், சாத்தங்குப்பம், தையூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறு பெட்டிக்கடைகளில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கேளம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அந்தப் பகுதிகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது வீராணம் சாலையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை நடத்தினர்.
அப்போது கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 21 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் பாளையம் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (41) என்பவர் தனக்கு அவற்றை வழங்கி வந்ததாக பாளையம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மணிகண்டனை பிடித்து போலீஸார் விசாரித்தனர்.
அப்போது மணிகண்டன், ஆந்திராவுக்கு சென்று அங்கிருந்து ரயில் மூலம் பிஸ்கட் மற்றும் சாக்லேட் அடுக்கி வைக்கப் பயன்படுத்தப்படும் பெட்டிகளில் புகையிலைப் பொருட்களை மறைத்து கொண்டு வந்து விற்பனை செய்துவந்ததாக போலீஸாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து மணிகண்டனிடம் போலீஸார் நடத்திய சோதனையில் மேலும் 94 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து கேளம்பாக்கம் போலீஸார் பாளையம், மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.