திருச்சி: மோசடி வழக்கில் தொடர்புடைய பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர்கள் இருவரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.
திருச்சி, மதுரை, சென்னை, கும்பகோணம், நாகர்கோவில், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் பிரணவ் என்ற பெயரில் நகைக் கடை இயங்கி வந்தது. இங்கு பல்வேறு சிறு சேமிப்பு மற்றும் முதலீடு திட்டங்களில் அதிகளவில் போனஸ் தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது. இதை நம்பி முதலீடு செய்த பலரும், முதிர்வு தொகையை வழங்குமாறு கேட்டபோது அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த அக். 16-ம் தேதி முதல் நகைக் கடை திறக்கப்படாமல் பூட்டிக் கிடப்பதாகவும், முதலீடு செய்தவர்களை ஏமாற்றி விட்டு நகைக்கடை உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டதாகவும் திருச்சி பொருளாதார குற்றப் பிரிவு காவல் நிலையத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, நகைக்கடை உரிமையாளர்கள் மதன், அவரது மனைவி கார்த்திகா உள்ளிட்டோர் மீது பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் அக்.18-ம் தேதி மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர், இது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள 11 இடங்களில் இந்த நகைக்கடையின் கிளைகளில் போலீஸார் சோதனை நடத்தி, பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும்ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும், திருச்சி கிளை மேலாளர் நாராயணன் கைது செய்யப் பட்டுள்ளார். இது தொடர்பாக இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால் நகைக் கடை உரிமையாளர்கள் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.
இந்த நிலையில், நகைக் கடை உரிமையாளர்களான மதன், கார்த்திகா ஆகியோர் வெளி நாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க, அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக தமிழக பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் கலைச் செல்வன் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.