கோப்புப்படம் 
க்ரைம்

ஶ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 6 மாதங்களில் 102 பவுன் நகை, ரூ.4.70 லட்சம் திருட்டு

அ.கோபால கிருஷ்ணன்

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பூட்டிய வீடுகளை குறி வைத்து நடக்கும் தொடர் திருட்டால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த 6 மாதங்களில் 11 இடங்களில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 102 பவுன் நகை மற்றும் ரூ.4.70 லட்சம் பணம் திருடப்பட்டது.

இதுவரை இரு சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 18.5 பவுன் நகை மட்டுமே மீட்கப்பட்டு உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 6 மாதத்திற்கு மேலாக ஆளில்லாத வீடுகளை குறிவைத்து, மர்ம நபர்கள் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மே மாதம் 26-ம் தேதி இரவு தன்யா நகரில் 3 வீடுகளில் பூட்டை உடைத்து 29 பவுன் தங்க நகை மற்றும் ரூ.80 ஆயிரம் பணம் திருடப்பட்டது. அதேநாளில் மல்லி அருகே தனியார் நிதி நிறுவன அலுவலகத்தில் ரூ.3 லட்சம் பணம் திருடப்பட்டது.

ஜூலை 15-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் - சிவகாசி சாலையில் உள்ள சாமிநத்தம் ஜெம் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருடப்பட்டது. மேலும் அதே நாளில் தாமரை நகரில் கணவன் மனைவியை கத்தியை காட்டி மிரட்டி 6.5 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மேட்டுமுள்ளிக்குளம் அய்யனார் கோயிலில் உணடியலை உடைத்து ரூ.40 ஆயிரம் பணம் திருடப்பட்டது. ஆகஸ்ட் 14-ம் தேதி வலையப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் திருடப்பட்டது. ஆகஸ்ட் 25-ம் தேதி ஊரணிபட்டி தெருவில் ஆளில்லாத வீட்டின் பூட்டை உடைத்து 6.5 பவுன் நகையும், சவுண்டியம்மன் கோயில் தெருவில் எல்இடி டிவியையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

கடந்த அக்டோபர் 8-ம் தேதி மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள என்.ஆர் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை ரூ.7 ஆயிரம் பணமும் திருடப்பட்டது. மேலும் செப்டம்பர் 7-ம் தேதி பெரும்பள்சேரியில் பூட்டிய வீட்டில் 12 பவுன் நகை திருடப்பட்டது. இதில் தாமரை நகரில் கணவன் - மனைவியை மிரட்டி நகை பறித்தது, பெரும்பள்சேரியில் பூட்டிய வீட்டில் நகை திருட்டு ஆகிய இரு சம்பவங்களில் மட்டுமே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 18.5 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

பிற திருட்டு சம்பவங்களில் போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் ஞாயிறு அதிகாலை ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 22 பவுன் நகை திருடப்பட்டு உள்ளது.

ஶ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள முல்லை நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சமுத்திரக்கனி (62). இவர் ஜமீன்கொல்லங்கொண்டான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது இரு மகன்களுக்கும் திருமணமாகி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். சமுத்திரகனி தனது மகன்களை பார்ப்பதற்காக கடந்த 30-ம் தேதி சென்னை சென்றார். நேற்று காலை அவரது சகோதரி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டி உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து 22 பவுன் தங்க நகை திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகாரில் ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் நடைபெறும் தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்கவும், போலீஸார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வலியுறுத்தி கடந்த இரு நாட்களுக்கு முன் கிருஷ்ணன்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவுக்கு இன்ஸ்பெக்டர் இல்லாதது, போதிய காவலர்களை நியமிக்காதது, கண்காணிப்பு காமிராக்கள் முறையாக செயல்படாதது உள்ளிட்ட காரணங்களால் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். மேலும் இரவு நேர ரோந்து பணியை போலீஸார் சரிவர மேற்கொள்ளாத காரணத்தால் தொடர் திருட்டு சம்பவங்கள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

SCROLL FOR NEXT