உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நகரில், பொதுப் பணி துறைக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது. அங்கு சைனிக் பள்ளியில் இருந்து ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் (60) தனியாக வசித்து வந்தார்.
அவரது குடும்பத்தினர் கோத்த கிரியில் வசிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே குடும்பத்தினரின் தொடர்பின்றி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக அவர் வசித்து வந்த வீடு உட்புறமாக தாழிடப்பட்டு காணப்பட்டது. மேலும், வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியுள்ளது.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸார் சென்று, கதவை உடைத்து சென்று பார்த்த போது ரமேஷ் இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடல் நலக்குறைவு காரணமாகவோ அல்லது மாரடைப்பாலோ இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. உடுமலை அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை செய்த பிறகு, உறவினர்களிடம் அவரது சடலம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து அமராவதி நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.