திருப்பூர்: திருப்பூர் குழந்தைகள் உதவி மையத்துக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாஷா அறிவுறுத்தலின் படி திருப்பூர் கொங்கு பிரதான சாலை கேஜி லே - அவுட் பகுதியில் செயல்படும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சபாகரீம் என்பவரின் பனியன் நிறுவனத்தில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குழந்தைகள் உதவி மைய ஆற்றுப்படுத்துநர் வரதராஜ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் சதீஷ் குமார் மற்றும் திருப்பூர் வடக்கு போலீஸார் இணைந்து, குழந்தை தொழிலாளர் மீட்பு ஆய்வு செய்தனர். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சிறுவர்கள் 5 பேர் தங்கி பணி புரிவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்களது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
நாளை (நவ.6) குழந்தைகள் நலக்குழு முன் சிறுவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு பெற்றோர் வசம் ஒப்படைக்கப்படுவர். சிறுவர்களை பணியமர்த்திய நிறுவன உரிமையாளர் மீது,குழந்தை தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்கு படுத்துதல் சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது போன்று குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப் பட்டிருந்தால், குழந்தைகள் உதவி மைய எண் 1098-க்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.