பலராமன் 
க்ரைம்

சென்னை | நடிகை கவுதமியின் சொத்தை விற்று ரூ.6.90 கோடி மோசடி புகாரில் ஒருவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: நடிகை கவுதமி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் வசித்து வருகிறார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் மனு அளித்தார்.

அதில், திருவள்ளூர் மாவட்டம், கோட்டையூர் கிராமத்தில் எனக்கு சுமார் 8.63 ஏக்கர் நிலம் இருந்தது. அதை விற்று தருவதாக சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் பலராமன் (64), செங்கல்பட்டைச் சேர்ந்த ரகுநாதன் ஆகிய இருவரும் பொது அதிகாரம் பெற்றுக் கொண்டனர்.

அதன் பின்னர் அந்த இடத்தை தனியார் நிறுவனத்துக்கு 2015-ம் ஆண்டு விற்பனை செய்து, விற்பனை பணமாக எனக்கு ரூ.4.10 கோடி கொடுத்தனர். ஆனால் எனது நிலத்தை ரூ.11 கோடிக்கு விற்பனை செய்துள்ளது 2021-ல்தான் தெரியவந்தது. வெறும் ரூ.4.10 கோடி மட்டும் தந்து என்னை ஏமாற்றியுள்ளனர். எனவே, இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து வரவேண்டிய ரூ.6.90 கோடியை பெற்றுத் தர வேண்டும் என புகாரில் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆபிரகாம் குரூஸ் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், கவுதமி அளித்த புகார் உண்மை என தெரியவந்தது. இதற்கிடையில், புகாருக்குள்ளானவர்கள் தலைமறைவானார்கள். அவர்களை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், பலராமன் நேற்று போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT