சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்ற சரக்கு வேன், கும்மிடிப்பூண்டி அருகே ஓபுளாபுரத்தில் கவிழ்ந்தது. 
க்ரைம்

ரேஷன் அரிசி கடத்தல் வேன் கவிழ்ந்து விபத்து: 3.5 டன் அரிசி பறிமுதல்; கும்மிடிப்பூண்டி அருகே ஓட்டுநர் கைது

செய்திப்பிரிவு

கும்மிடிப்பூண்டி: சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்ற சரக்கு வேன், கும்மிடிப்பூண்டி அருகே கவிழ்ந்தது. அதிலிருந்த மூன்றரை டன் ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்; ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், விநியோகிக்கப்படும் அரிசி சேகரிக்கப்பட்டு, ஆந்திராவுக்கு லாரிகள், வேன்கள் மற்றும் புறநகர் மின்சார ரயில்களில் கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. அவ்வப்போது, போலீஸார் ரேஷன் அரிசி கடத்தல் கும்பலைக் கைது செய்து வருகின்றனர்.

இருப்பினும், தமிழகத்திலிருந்து, ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில், நேற்று காலை சென்னையிலிருந்து ஆந்திரா நோக்கி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேன், சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அருகே ஓபுளாபுரம் பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனே, சரக்கு வேன் ஓட்டுநர் தப்பியோடினார்.

இதனால், வேனிலிருந்த அரிசி மூட்டைகளில் சில மூட்டைகள் கிழிந்து சாலையில் அரிசி சிதறியது. இதுகுறித்து, தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் சம்பவ இடம் விரைந்து சோதனை செய்தனர். அச்சோதனையில், சரக்கு வேனில், சென்னையிலிருந்து, மூன்றரை டன் ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்துக்கு கடத்தி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது

இதையடுத்து, ரேஷன் அரிசியுடன் கூடிய சரக்கு வேனை போலீஸார் பறிமுதல் செய்து, திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து, வழக்குப் பதிவு செய்த திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார், தப்பியோடிய சரக்கு வேன் ஓட்டுநரான, செங்குன்றத்தை சேர்ந்த மாதவன் (51) என்பவரைக் கைது செய்தனர். தொடர்ந்து, சரக்கு வேனின் உரிமையாளரைத் தேடி வரும் போலீஸார், இந்த கடத்தலின் பின்னணியில் உள்ளோர் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT