திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி அருகே காஞ்சிபாடி பகுதியை சேர்ந்தவர் டில்லிபாபு (30). இவர், கடந்த 2019-ம் ஆண்டு, காஞ்சிபாடி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை கத்தியை காட்டி கடத்தி, பூந்தமல்லி லாட்ஜ் ஒன்றில் 10 நாட்கள் அடைத்து வைத்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கு, டில்லிபாபுவின் தந்தை ஏழுமலை (53) உடந்தையாக இருந்துள்ளார்.
இதுதொடர்பாக கனகம்மாசத்திரம் போலீஸார் டில்லிபாபு, ஏழுமலை ஆகியோர் மீது தனி தனியாக இரு வழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்குகளின் விசாரணை திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தன.
இதில், ஏற்கெனவே விசாரணை முடிவுக்கு வந்த டில்லிபாபு மீதான வழக்கில் கடந்த ஜூன் 9-ம் தேதி, டில்லிபாபுக்கு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், கடத்திய குற்றத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், லாட்ஜில் அடைத்து வைத்த குற்றத்துக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுபத்திராதேவி உத்தரவிட்டார்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த டில்லிபாபுவின் தந்தை ஏழுமலை, கடந்த 13-ம் தேதி கைதானார். இச்சூழலில், ஏழுமலை மீதான வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது. அதில், ஏழுமலை மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, ஏழுமலை மீதான வழக்கின் தீர்ப்பை நீதிபதி சுபத்திராதேவி நேற்று முன்தினம் அளித்தார்.
அதில், ஏழுமலைக்கு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மகனுக்கு உடந்தையாக இருந்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், கடத்தலுக்கு உடந்தையாக இருந்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், லாட்ஜில் அடைத்து வைக்க உடந்தையாக இருந்த குற்றத்துக்காக ஓர் ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தன் தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.