பொன்னேரி: சென்னை - திருவொற்றியூர், விம்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன். இவர், அப்பகுதி திமுக நிர்வாகிகளில் ஒருவர். விவேகானந்தன் தன் வீட்டின் அருகே ஆர்.வி இன்ஜினியரிங் என்ற கட்டிட நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
சென்னை மாநகராட்சி மற்றும் அரசின் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வரும் இந்த நிறுவனத்தை, விவேகானந்தனின் மூத்த மகன் காமராஜ் (34), நிர்வகித்து வந்தார். காமராஜுக்கு மனைவி யாமினி, இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், விம்கோ நகர் அருகே சின்ன எர்ணாவூர்- பூம்புகார் நகரில் உள்ள தங்களின் நிறுவன அலுவலகத்துக்கு நேற்று காலை காமராஜ் சென்றுள்ளார். அங்கிருந்த அலுவலக ஊழியர் ஒருவரிடம் நிறுவன பணிகள் தொடர்பாக காமராஜ் பேசிக் கொண்டிருந்தபோது அலுவலக வாசலுக்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலில் 3பேர், அத்துமீறி அலுவலகத்துக்குள் நுழைந்து, பட்டாக்கத்தியால் காமராஜை தாக்கினர். பின்னர் அனைவரும் தப்பியோடினர்.
இந்த சம்பவத்தில், முகம், கை, கால் உட்பட பல்வேறு இடங்களில் பலத்த காயமடைந்த காமராஜ், அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு, திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து எண்ணூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.