சேலம்: சேலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு செய்தி பரப்பிய நாம் தமிழர் கட்சி பிரமுகரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் கருங்கல்பட்டி 56-வது வார்டு திமுக செயலாளர் முருகேசன். இவர் செவ்வாய்ப் பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி குமரேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார். இதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தாதகாப்பட்டியைச் சேர்ந்த குமரேசன் (49) சமூக வலைதளத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியது தெரியவந்தது. இவர் நாம் தமிழர் கட்சியில் தெற்கு தொகுதி முன்னாள் துணைத் தலைவராக இருந்துள்ளார். இதையடுத்து, குமரேசனை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.