லலித் பாட்டீல் 
க்ரைம்

மும்பை போதைப் பொருள் கடத்தல் மன்னன் சென்னையில் துப்பாக்கி முனையில் கைது: மருத்துவமனையில் இருந்து தப்பி தலைமறைவாக இருந்தவர்

செய்திப்பிரிவு

சென்னை: தலைமறைவாக இருந்த மும்பைபோதைப் பொருள் கடத்தல் மன்னன் சென்னையில் துப்பாக்கிமுனையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் குறித்தும், அதன் பின்னணி குறித்தும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

மும்பையில் பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னனாக வலம் வந்தவர் லலித் பாட்டீல். கடந்த 2020-ம் ஆண்டு சுமார் ரூ.20 கோடி மதிப்புடைய போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக இவர் மற்றும் அவரது கூட்டாளிகளை மும்பை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்குள்ள சிறையில் அடைத்தனர். போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக லலித் பாட்டிலுக்கு சர்வதேச அளவிலான கும்பலுடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறையிலிருந்தபோது லலித் பாட்டிலுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறைத் துறை அதிகாரிகள் இந்த மாதம் முதல் வாரத்தில் அவரை மும்பையில் உள்ள அரசு பொது மருத்துவமனை ஒன்றில் உள்ள சிறை வார்டில் சேர்த்தனர். அப்போது மருத்துவர்கள் மற்றும் சிறை வார்டில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரிடம் கழிப்பறைக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்ற லலித் பாட்டீல், அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதையடுத்து, அந்த மாநில போலீஸார் தனிப்படை அமைத்து லலித் பாட்டிலை தொடர்ந்து தேடிவந்தனர். காவல் நிலைய போலீஸார், சிறப்புப் பிரிவு போலீஸார் மற்றும் சைபர் க்ரைம் போலீஸார் ஒருங்கிணைந்து தேடுதல் பணியைமுடுக்கிவிட்டனர். லலித் பாட்டீல்பயன்படுத்தியதாகக் கூறப்படும்செல்போன் சிக்னல் அடிப்படையிலும் துப்பு துலக்கப்பட்டது.

இதையறிந்த அவர், அடிக்கடி தனது செல்போன் மற்றும் சிம் கார்டுகளை மாற்றினார். இதனால், அவரைப் பிடிக்க முடியாமல் மும்பை போலீஸார் திணறினர். லலித் பாட்டீல் குஜராத், கர்நாடகா எனத் தனது இருப்பிடத்தை வெவ்வேறு மாநிலங்களுக்கு மாற்றிக் கொண்டே இருந்தார்.

இருப்பினும், அவரது நடமாட்டத்தை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து போலீஸார் பின் தொடர்ந்தனர். மேலும், லலித் பாட்டிலின் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினரும் போலீஸாரின் ரகசிய கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு, அவர்களது செல்போன் உரையாடல்கள் கவனிக்கப்பட்டன.

இறுதியாக அவர் சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் பதுங்கிஇருப்பதை மும்பை போலீஸார் கண்டறிந்து உறுதி செய்தனர். இதையடுத்து மும்பை போலீஸார் சென்னை விரைந்தனர்.

கடந்த 2 நாட்களாகத் தொடர்ந்து நோட்டமிட்டனர். இறுதியாக சென்னை போலீஸார் உதவியுடன் துப்பாக்கி முனையில் லலித்பாட்டிலை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், அவரை மும்பை அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள லலித் பாட்டீல் மீது சுமார் ரூ.130 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் என்ற போதைப் பொருளை தனியாக தொழிற்சாலையில் தயாரித்து சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு அனுப்பிய வழக்கு உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

அதேபோல் கடந்த 2020-ம் ஆண்டு லலித் பாட்டீல் கைது செய்யப்பட்டாலும், அவர் சிறையிலிருந்தவாறு போதைப் பொருட்கள் கடத்தலைத் தடையின்றி தனதுஆட்கள் மூலம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது லலித் பாட்டீல் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதால், சென்னையில் அவர் தங்குவதற்குப் போதைப் பொருள் கடத்தல் கும்பல் யாரேனும் உதவிசெய்துள்ளார்களா என்ற கோணத்தில் சென்னை போலீஸாரும் விசாரணை வளையத்தை விரிவுபடுத்தி உள்ளனர்.

இந்த விவகாரத்தில் சென்னை மற்றும் மும்பை போலீஸார் ஒருங்கிணைந்து தகவல்களைப் பரிமாறி குற்றவாளிகள் அனைவரையும் கூண்டோடு கைது செய்ய முடிவு செய்துள்ளனர். பிரபல மும்பை போதைப் பொருள் கடத்தல் மன்னன் சென்னையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT