பேராசிரியர் பரமசிவம் 
க்ரைம்

குமரி மருத்துவ மாணவி தற்கொலை வழக்கு: பேராசிரியரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: மருத்துவ கல்லூரி மாணவி சுகிர்தா தற்கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேராசிரியர் பரமசிவத்தை காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் நீதிமன்றத்தில் நேற்று சிபிசிஐடி போலீஸார் மனுதாக்கல் செய்தனர்.

தூத்துக்குடி வி.இ.ரோடு பகுதியை சேர்ந்த சிவகுமாரின் மகள் சுகிர்தா (27). இவர் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மயக்கவியல் மருத்துவம் 2ம் ஆண்டு படித்து வந்தார். சுகிர்தா கடந்த 6ந் தேதி கல்லூரி விடுதியில் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து குலசேகரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மாணவி சுகிர்தா கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினார்கள். அதில் கல்லூரி பேராசிரியர் பரம சிவம் (63) பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும், மயக்கவியல் பயிற்சி மருத்துவர்கள் ஹரிஷ், ப்ரீத்தி ஆகியோர் மனதளவில் தொல்லை செய்ததாகவும் கூறியிருந்தார்.

இதையடுத்து பரமசிவம், ப்ரீத்தி, ஹரிஷ் ஆகிய 3 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் பேராசிரியர் பரமசிவம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மாணவி சுகிர்தா தற்கொலை வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மூகாம்பிகா கல்லூரிக்கு சென்று மாணவி தற்கொலை தொடர்பான வலுவான ஆதாரங்களை திரட்டி வரும் சிபிசிஐடி போலீஸார், அங்குள்ள பேராசியர்கள், பயிற்சி மருத்துவர்கள், மாணவ, மாணவியர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். சுகிர்தாவின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் தலைமறைவாகி உள்ள பிரீத்தி, ஹரீசை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டபோது, ஹரிஷ் மதுரை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். தற்போது பிரீத்தியும் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் பரமசிவத்தை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸார் நேற்று நாகர்கோவில் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையே மூகாம்பிகை மருத்துவ கல்லூரியில் இதற்கு முன்பு பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்த வழக்குகளை குலசேகரம் காவல் நிலையத்தில் திரட்டிய சிபிசிஐடி போலீஸார், அந்த தற்கொலையின் பின்னணியில் உள்ள காரணங்களையும் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அத்துடன் மருத்துவ கல்லூரியில் நிகழும் தற்கொலையின் பின்னணியில் நிர்வாகத்தின் நெருக்கடி காரணமாக உள்ளதா? அல்லது வேறு பிரச்சினைகள் உள்ளனவா ? என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இது மருத்துவத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT