நாமக்கல்/சென்னை: குழந்தை விற்பனை விவகாரத்தில் குமாரபாளையத்தை சேர்ந்த பெண் தரகர் கைது செய்யப்பட்டார்.
திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியைச் சேர்ந்த தினேஷ் மனைவி நாகஜோதிக்கு, கடந்த 7-ம் தேதி அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. பின்னர்அவர் மேல்சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில், கடந்த 12-ம் தேதிலோகாம்பாள் என்பவர் தினேஷை அணுகி, 3-வதாக பிறந்த பெண்குழந்தையை விற்பனை செய்யும்படி கேட்டு, ரூ.2 லட்சம் வரை பேரம் பேசியுள்ளார். இதற்கு மறுப்புத் தெரிவித்த தினேஷ், இதுகுறித்து எஸ்.பி. ச.ராஜேஸ்கண்ணனிடம் புகார் செய்தார்.
இதுகுறித்து எஸ்.பி. உத்தரவின்பேரில் திருச்செங்கோடு போலீஸார் விசாரணை நடத்தி, லோகாம்பாளை கைது செய்தனர். தொடர் விசாரணையில், திருச்செங்கோடு அரசுமருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மகப்பேறு மருத்துவர் அனுராதா என்பவர், லோகாம்பாளுக்கு பின்புலமாக செயல்பட்டது தெரியவந்தது. லோகாம்பாள் மூலம் அவர்10 குழந்தைகள் மற்றும் கிட்னி விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவர்அனுராதாவையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதற்கிடையே, குழந்தை விற்பனையில் தொடர்புடையவர்களை கைது செய்ய, டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில், குழந்தை விற்பனையில் குமாரபாளையத்தைச் சேர்ந்த பாலாமணி என்ற பெண் தரகருக்கும் தொடர்புஇருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாலாமணியைக் கைது செய்த போலீஸார், வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரித்து வருகின்றனர்.
கிளினிக்குக்கு ‘சீல்’: குழந்தை விற்பனை வழக்கில் கைதான திருச்செங்கோடு அரசு பெண் மருத்துவர் அனுராதா, திருச்செங்கோடு-சேலம் சாலையில் கிளினிக் நடத்தி வந்தார். அந்த கிளினிக்குக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு ‘சீல்’ வைத்தனர். மேலும், திருச்செங்கோடு தேர்நிலை அருகே உள்ள அரசு மருத்துவமனையில், மருத்துவர் அனுராதா பயன்படுத்தி வந்த அறைக்கும் அதிகாரிகள் `சீல்’ வைத்துள்ளனர்.
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் இதுவரை 7 குழந்தைகள், ரூ.3 முதல் ரூ.5 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் குழந்தைகளை விற்றுள்ளதாகத் தெரிகிறது.
அமைச்சர் எச்சரிக்கை: இதுகுறித்து சுகாதாரத் துறைஅமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பெற்றோரின் ஏழ்மையைப் பயன்படுத்தி, குழந்தைகளைவிற்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.வருங்காலங்களில் இதுபோன்றசட்டவிரோத சம்பவங்களைத் தடுக்கும் வகையில், குழந்தையை வாங்கிய மற்றும் விற்பனை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.