க்ரைம்

சென்னை | ரவுடி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மயிலாப்பூர் பி.என்.கே.கார்டன் பகுதியை சேர்ந்தவர் சரவணன் என்ற கிழங்கு சரவணன் (41). காவல் துறையின் ரவுடிகள் பட்டியலில் ஏ பிளஸ் வரிசையில் இருந்த இவர்மீது, கொலை வழக்குகள் உள்பட 13 வழக்குகள் உள்ளன.சரவணனுக்கு அச்சுறுத்தல் இருந்ததால், மயிலாப்பூரை விட்டு மதுரவாயல் அருகே உள்ள வானகரம் சக்தி நகருக்கு அண்மையில் குடும்பத்துடன் இடம் பெயர்ந்தார்.

இந்நிலையில், கடந்த 11ம் தேதி இரவு வானகரம் பகுதியில் சரவணன் குடும்பத்துடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது 8 பேர் கும்பல், ஆட்டோவை வழிமறித்து சரவணனை கொலை செய்துவிட்டு தப்பியது.

பிரபல ரவுடி மயிலாப்பூர் சிவக்குமார் கொலைக்கு பழிக்குப் பழியாகவே, இந்த கொலை நடைபெற்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே, கொலை வழக்கில் தொடர்புடைய மயிலாப்பூரை சேர்ந்த நித்யானந்தம் (42), அவரது கூட்டாளிகள் பவித்ரன் (28), கன்னியப்பன் (34), கோபால் (34), சையது (33) ஆகிய 5 பேர் ஆற்காடு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இந்நிலையில், சரவணன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மயிலாப்பூர் சுரேஷ் மாயா (33), செல்வம் (24), மகேந்திரன் (30) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT