மதுரை: பல கோடி ரூபாய் பணம் வசூலித்து முறைகேடு செய்த மதுரையைச் சேர்ந்த பிரபல நகைக் கடைக்கு எதிராக புகார்கள் குவிகின்றன. போலீஸ் குடும்பத்தினரையும் ஏமாற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சியை மையமாக கொண்டு செயல்பட்ட ‘பிரணவ் ஜூவல்லர்ஸ்‘ என்ற நகைக்கடை சில மாதங்களுக்கு முன்பு மதுரை மேலமாசி வீதியில் கிளையைத் தொடங்கியது. இங்கு பழைய, மற்றும் புதிதாக வாங்கிய நகையை உடனே டெபாசிட் செய்தால் ஓராண்டுக்குப் பிறகு டெபாசிட் அளவுக்கான நகைக்கு சுமார் 9 சதவீத வட்டிக் குரிய தங்கக் காசுகளுடன் புதிய நகைகள் வழங்கப்படும்,
மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் செலுத்தினால் 12 மாதங்களுக்குப் பிறகு செய்கூலி, சேதாரமின்றி செலுத்திய தொகைக் கேற்ப புதிய நகை வழங்கப்படும் என பல திட்டங்களில் வாடிக்கையாளர்களைச் சேர்த்தனர். இதன் மூலம் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பழைய புதிய நகைகளை முதலீடு செய்ததோடு நகைச் சீட்டிலும் சேர்ந்தனர்.
இந்நிலையில், கடந்த 2 வாரங் களுக்கு முன்பு மதுரை நிலையூரைச் சேர்ந்த வாடிக்கையாளர் கீர்த்திகா உள்ளிட்ட சிலர் கடைக்குச் சென்ற போது, நகைக்கடை மூடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பாதிக்கப்பட்டோர் திலகர் திடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து சுமார் 80-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வழக்கறிஞர் ஜெய பிரபா தலைமையில் நேற்று முன்தினம் மாநகர் காவல் ஆணையர் லோகநாதனிடம் புகார் மனு அளித்தனர். ஆணையரின் உத்தரவின்பேரில் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே, பாதிக்கப் பட்ட சுமார் 60-க்கும் மேற்பட்டோர் மதுரை மாநகர் குற்றப்பிரிவில் நேற்று புகாரளித்தனர்.
மதுரை மாநகரில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குடும்பத்தினரும் நகை, பணம் செலுத்தி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் செயல்பட்ட இக்கடையின் 8-க்கும் மேற்பட்ட கிளைகளும் அடுத்தடுத்து மூடப் பட்டதாகவும் தலைமறைவான உரிமையாளர் களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், ‘மதுரையில் மட்டும் சுமார் ரூ. 2 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருக்கிறது. ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை நகை, பணம் செலுத்தி வாடிக்கையாளர்கள் ஏமாந்துள்ளனர். இன்னும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரிடமும் புகார் பெற போலீஸ் முயற்சிக்கிறது.
காவல்துறையினர் குடும்பத்தினரே பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குள் வாட்ஸ் அப் குரூப் ஏற்படுத்தி தகவல்கள் சேகரிக்கின்றனர். நகை, பணம் இழந்தோருக்கு உரிய நிவாரணம் கிடைக்க காவல்துறை துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பாதிக்கப்பட்டோர் எதிர்பார்க்கின்றனர்’ என்றார்.