சென்னை: ஒடிசா மாநிலம் கந்தாமால் மாவட்டம் ஹஜூரிபடா பகுதியைச் சேர்ந்தவர் லங்கேஷ்வர் கன்ஹார். இவரது மனைவி நந்தினி கன்ஹார்.இவர்கள் திருப்பதியில் பணியாற்றி வருகின்றனர்.
நந்தினி கன்ஹார் சொந்த ஊருக்குச் செல்வதற்காக தனது ஒரு வயது ஆண் குழந்தையுடன் திருப்பதியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். தொடர்ந்து, ஆலப்புழா-தன்பாத் விரைவு ரயிலில் செல்ல சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 8-வது நடைமேடையில் காத்திருந்தார். அப்போது, நந்தினி கன்ஹாரிடம் வடமாநிலத்தைச் சேர்ந்தஇருவர் பேச்சுக் கொடுத்தனர். பிறகு,அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்ககுழந்தையுடன் நந்தினி தூங்கினார்.
அதிகாலை 2 மணிக்கு தூக்கம் கலைந்து நந்தினி எழுந்தபோது, தனது குழந்தை காணாமல் போனதுதெரிந்தது. அதிர்ச்சி அடைந்த நந்தினி, பல இடங்களில் தேடியும்குழந்தையை காணவில்லை.
எனவே, சென்ட்ரல் ரயில்வே போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்தனர். ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் சரளா, போலீஸார்அடங்கிய தனிப்படையினர் தேடத் தொடங்கினர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்தபோது, வடமாநிலத்தைச்சேர்ந்த இருவரும் அந்த குழந்தையைத் தூக்கிக்கொண்டு, வால்டாக்ஸ் சாலையில் ஓர் ஆட்டோவில் ஏறிச் செல்வது தெரிந்தது.
அந்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் விசாரித்தபோது, குன்றத்தூரில் அவர்களை இறக்கிவிட்டதாகத் தெரிவித்தார். உடனே, அந்த ஆட்டோஓட்டுநர் துணையுடன் குன்றத்தூர்ஏரிக்கரை பகுதியில் ஒரு குடிசைவீட்டில் தங்கியிருந்த அவர்களை ரயில்வே போலீஸார் நேற்று காலைபிடித்து, குழந்தையை மீட்டனர்.
பின்னர், அவர்களை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதில், அவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபாஸ் மண்டல்(44), டெல்லியைச் சேர்ந்த நமீதா(40) என்பதும், இவர்கள் திட்டமிட்டு குழந்தையைக் கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறும்போது, ``பிரபாஸ் மண்டலுக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் ஜார்க்கண்டில் வசிக்கின்றனர். இதுபோல, நமீதாவுக்கும் ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் டெல்லியில் இருக்கின்றனர்.
பிரபாஸ், நமீதா இருவரும் குன்றத்தூரில் கூலி வேலை பார்த்தபோது, பழக்கம்ஏற்பட்டு, குன்றத்தூர் ஏரிக்கரை பகுதியில் குடிசை வீடு வாடகைக்கு எடுத்து, ஒன்றாக குடும்பம் நடத்திவந்தனர். குழந்தையை வளர்க்கும் நோக்கில் கடத்தியதாக அவர்கள்தெரிவித்தனர்.
ஆனால், குழந்தையைக் கடத்தி விற்கத் திட்டமிட்டுள்ளதாக கருதப்படுகிறது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது'' என்று கூறினர். குழந்தை கடத்தப்பட்ட, 6 மணி நேரத்தில் பத்திரமாக மீட்ட ரயில்வே தனிப்படை போலீஸாரை காவல் உயரதிகாரிகள் பாராட்டினர்.