பிரதிநிதித்துவப் பாவம் 
க்ரைம்

சுங்கத்துறை பணிகளுக்கான எழுத்து தேர்வில் முறைகேடு: ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய வடமாநில இளைஞர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சுங்கத்துறை பணிகளுக்கான எழுத்து தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய வடமாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர். மேலும், ‘ப்ளூடூத்’ கருவி பொருத்தி முறைகேட்டில் ஈடுபட்ட 30 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

சுங்கத்துறையில் 7 ஓட்டுநர், 8 கேண்டீன் உதவியாளர், ஒரு சமையலர், ஒரு எழுத்தர் என 17 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த தேர்வில் நாடு முழுவதும் இருந்து 1,600 பேர் பங்கேற்றனர். 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தேர்வு கண்காணிப்பில் ஈடுபட்டனர். 50 மதிப்பெண்கள் கொண்ட இந்த தேர்வு ஒருமணி நேரம் நடைபெற்றது. தேர்வு நடைபெற்று கொண்டிருந்தபோது, தேர்வர்கள் ஒரு சிலரின் நடவடிக்கைகள், தேர்வு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சந்தேகத்துக்குரிய தேர்வர்களை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவர்கள் தங்களது காதில் சிறிய அளவிலான ப்ளூடூத் கருவி பொருத்தி இருந்தது தெரியவந்தது. அந்த வகையில், 30 வடமாநிலத்தவர்கள், காதில் சிறிய அளவிலான ப்ளூடூத் கருவி பொருத்தி தேர்வில் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இவர்களை வடக்கு கடற்கரை போலீஸில் சுங்கத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

போலீஸார், நடத்திய விசாரணையில், 28 பேர் ஹரியாணாவை சேர்ந்தவர்கள் என்பதும், 2 பேர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. தேர்வர்கள் ப்ளூடூத் வழியாக கேள்விகளை சொல்ல, வெளியில் இருந்து ஒரு நபர் அதற்கான பதிலை தெரிவித்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், இந்த தேர்வில், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சர்வின் (22) என்ற இளைஞருக்கு பதிலாக, அவரது உறவினர் சவன்(22) என்பவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவரை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர். மற்றவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஜாமீனில் விடுவித்தனர்.

ஏற்கெனவே, 2022-ல் பாதுகாப்புத் துறை பணியிடங்களுக்கான தேர்வு நந்தம்பாக்கத்தில் நடந்தபோது, ஹரியாணாவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ப்ளுடூத் பயன்படுத்தியதும், ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT