க்ரைம்

திருப்பத்தூரில் பிரபல ஸ்கேன் மைய புரோக்கர் கைது

செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே குடிசை வீட்டில் கர்ப்பிணிகளின் கருவில் வளருவது ஆணா, பெண்ணா? என கண்டறியும் ஸ்கேன் பரிசோதனை செய்ய முயன்ற புகாரில் பிரபல ஸ்கேன் மைய புரோக்கரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் பேராம்பட்டு கிராமத்தில் குடிசை வீடு ஒன்றில் கர்ப்பிணிகளின் கருவில் வளரும் குழந்தை குறித்த சோதனை நடத்துவதாக கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார துறையினருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினர் உதவியுடன் அந்த குடிசை வீட்டில் ஆய்வு செய்த போது,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த 4 பெண்கள் மட்டும் இருந்தனர். அவர்களுடன், புரோக்கர் ஒருவரும் இருந்துள்ளார். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பிடிபட்ட புரோக்கர் திருப்பத்தூர் அடுத்த நாயக்கனேரியைச் சேர்ந்த சங்கர் (51) என்றும், திருப்பத்தூரில் பிரபலமான சுகுமார் ஸ்கேன் மையத்தின் புரோக்கர் என்பதும் தெரியவந்தது.

இது தொடர்பாக, திருப்பத்தூர் மாவட்ட இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மாரிமுத்து, திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சங்கரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சுகுமார் ஸ்கேன் மைய உரிமையாளர் சுகுமார் என்பவரை தேடி வருவதாக காவல் துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மருத்துவத் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘திருப்பத்தூர் நகரில் சுகுமார் ஸ்கேன் மையம் நடத்தி வரும் சுகுமார் என்பவர் எம்.எஸ்.சி படித்துவிட்டு ஸ்கேன் பரிசோதனை செய்யும் பயிற்சியை முடித்துள்ளார்.

அதை வைத்து திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் குடிசை வீடுகளை வாடகைக்கு எடுத்து கர்ப்பிணிகளின் கருவில் வளருவது ஆணா, பெண்ணா? என்று ஸ்கேன் பரிசோதனை செய்து சொல்வதுடன், கருவில் வளருவது பெண்ணாக இருந்தால் அவற்றை கலைக்கவும் ஏற்பாடு செய்து வருகிறார். இவரை, கடந்த 2013, 2014 மற்றும் 2022-ம் ஆண்டு கைது செய்தாலும் தொடர்ந்து அந்த தொழிலை நடத்தி வருகிறார்.

இதுவரை 10 ஆயிரம் கருக்கலைப்புகளில் தொடர்புள்ளவர் சுகுமார். அரசியல் பின்புலம் இருப்பதால் அவரை கைது செய்தாலும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய முடியாத நிலை உள்ளது. 2 ஆயிரம் வாடகை: தினசரி லட்சங்களில் சம்பாதிக்கிறார். ஒரு மணி நேரம் ஒரு குடிசை வீட்டுக்கு 2 ஆயிரம் வாடகை கொடுத்து,

அடுத்த ஒரு மணி நேரத்தில் வேறு எங்காவது ஒரு குடிசை வீட்டில் ஸ்கேன் பரிசோதனை செய்வார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் கிராமத்தில் கருக்கலைப்பு செய்த பெண் குறித்த புகாரின்பேரில் விசாரணை நடத்தியதில் பேராம்பட்டில் ஸ்கேன் செய்ய முயன்ற தகவல் கிடைத்துள்ளது. கருவில் வளருவது ஆணா, பெண்ணா? என சொல்வதற்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை வசூல் செய்து வருகிறார்’’ என்றனர்.

SCROLL FOR NEXT