க்ரைம்

கிருஷ்ணகிரியில் பிரபல நகைக் கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பிரபல நகைக் கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து காவல் துறை விசாரணை செய்து வருகிறது.

கிருஷ்ணகிரி - பெங்களூரு சாலையில் சென்ட்ரல் தியேட்டர் அருகில் உள்ள முகமது பஷீர் லே அவுட் காந்தி நகரை சேர்ந்தவர் எம்.பி.சுரேஷ் (56). இவர் பிரபல தொழில் அதிபர்.இந்தியன் வங்கி அருகே உள்ள பிரபல நகை கடையின் உரிமையாளர் ஆவார். மேலும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர் சங்க தலைவராகவும் இருந்து வந்தார்.

வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி அளவில் இவர் வீட்டில் இரண்டாவது தளத்தில் உள்ள தனது அறையில் இருந்தார். வீட்டில் உள்ளவர்கள் மற்ற அறைகளில் இருந்தனர். அப்போது எம்.பி.சுரேஷ் தங்கி இருந்த அறையில் இருந்து பலத்த சத்தம் கேட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, அவரது அறைக்கு ஓடி சென்று பார்த்துள்ளனர். அப்போது சுரேஷ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது அருகில் அவரின் உரிமம் பெற்ற நாட்டு துப்பாக்கியும் இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியில் அவர்கள் கதறி அழுதனர். இது குறித்து அவர்கள் கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் கிருஷ்ணகிரி டிஎஸ்பி (பொறுப்பு) மனோகரன் மற்றும் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் எம்.பி.சுரேஷ் தான் உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கியால் கழுத்துப் பகுதி அருகில் வைத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, தொழிலதிபர் எம்.பி.சுரேஷ் தற்கொலை செய்த தகவல் அறிந்ததும், கிருஷ்ணகிரி நகரை சேர்ந்த வணிகர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என ஏராளமானவர்கள் அவரது வீடு அருகில் திரண்டனர். அத்துடன், கைரேகை நிபுணர்களும், தடயவியல் நிபுணர்களும் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

தொழில்திபர் எம்.பி.சுரேஷ் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்தாரா அல்லது பண விவகாரத்தில் ஏதேனும் மன உளைச்சல் அடைந்து அதன் காரணமாக தற்கொலை செய்தாரா என கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலதிபர் எம்.பி.சுரேஷ் மரணம் அடைந்ததை தொடர்ந்து கிருஷ்ணகிரி நகரில் உள்ள அனைத்து வணிகர்களும் கடைகளை அடைத்தனர். இதனால் கிருஷ்ணகிரி நகரில் சென்னை சாலை, பெங்களூரு சாலை, காந்தி ரோடு, சேலம் சாலை, பழைய சப்-ஜெயில் சாலை என பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்தச் சம்பவம் குறித்து அறியாத பொதுமக்கள் கிருஷ்ணகிரி நகருக்கு வந்து, மீண்டும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

| தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம். |

SCROLL FOR NEXT