க்ரைம்

செங்கல்பட்டு அருகே போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கி சூடு: படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

மதுராந்தகம்: படாளம் அருகே விசாரணைக்காக வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி, போலீஸாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றபோது போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் காலனி பகுதியைச் சேர்ந்த பாளையம் என்பவரின் மகன் தணிகாச்சலம்(26). இவர் மீது, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விருதுநகர், சென்னை, திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெடிபொருட்கள் பயன்படுத்தி கொலை செய்த வழக்கு உட்பட 8 கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி, கொள்ளை வழக்குகள் உட்பட 17 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேலும், கடந்த 2014-ம் ஆண்டில் செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் காவல் நிலையத்தில் கொள்ளை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை செய்யூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு தணிகாச்சலம் ஆஜராகாததால், கடந்த பிப்ரவரி மாதம் பிடிவாரன்ட் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்பேரில், தணிகாச்சலத்தை கைது செய்வதற்காக மாவட்ட எஸ்பி சாய்பிரனீத் கடந்த ஆகஸ்ட் மாதம் செங்கல்பட்டு காவல் ஆய்வாளர் புகழ் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை எஸ்ஆர்எம்சி மருத்துவமனை அருகே தணிகாச்சலத்தை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.பின்னர், நள்ளிரவில் விசாரணைக்காக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டு, அங்கிருந்து வாகனத்தில், சித்தாமூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் சென்று கொண்டிருந்தபோது லாரல் மால் அருகே போலீஸாரை தாக்கிவிட்டுத் தப்பி செல்ல முயன்றதாக தெரிகிறது. அவரை போலீஸார் மடக்கிப் பிடிக்க முயன்றபோது, போலீஸாரை தாக்கிவிட்டு அவர் தப்பமுயன்றார். எனவே தனிப்படை காவல் ஆய்வாளர் அவரை துப்பாக்கியால் 2 முறை சுட்டதில் தணிகாச்சலத்தின் வலதுகால் மற்றும் வலது முழங்கையில் குண்டுகள் பாய்ந்து காயமடைந்தார்.

இதையடுத்து, ஆம்புலன்ஸ்மூலம் செங்கல்பட்டு அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக படாளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT