விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
விழுப்புரம் காந்தி சிலை அருகே 4 மாடிகள் கொண்ட வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் சூப்பர் மார்க்கெட், துணிக்கடை, திரையரங்கங்கள், தங்கும் விடுதி உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று பிற்பகல் 1 மணியளவில் அங்குள்ள உரிமையாளரின் அலுவலகத்தை மர்ம நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அந்த வணிக வளாகம் முழுவதும் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளது, இன்னும் சில மணி நேரத்தில் வெடித்து விடும் எனக் கூறிவிட்டு மர்ம நபர் போனை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வணிக வளாக தரப்பினர், இது குறித்து நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் வணிக வளாகத்துக்கு வந்தனர்.
மேலும் பாதுகாப்புக்காக தீயணைப்பு வாகனங்களும் அங்கு வரவழைக்கப்பட்டன. பின்னர் ஒவ்வொரு தளத்திலிருந்தும் பொதுமக்கள் படிப்படியாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் கடைகளில் இருந்த ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர். இதேபோல் அந்த வணிக வளாக நிர்வாகத்துக்கு உட்பட்ட பள்ளியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் ராணி உதவியுடன் வணிக வளாகத்தில் ஒவ்வொரு தளத்திலும் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.