சேலம்: சேலம் ஓமலூர் அருகே கோயில் உண்டியல் பூட்டை உடைத்து பூசாரி திருடியது சிசிடிவி காட்சி மூலம் அம்பலமானது. இதையடுத்து, பூசாரியை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தாத்தியம்பட்டி கிராமத்தில் பழமையான முத்தாளம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தை மாதத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். மேலும், அமாவாசை, பவுர்ணமி, வெள்ளிக் கிழமை உள்ளிட்ட முக்கியமான நாட்களில் விஷேச பூஜை நடத்தப்படும். சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வர்.
கோயில் பூசாரியாக அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் கோயில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் தாத்தியம்பட்டியைச் சேர்ந்த கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். நிர்வாகிகள் கோயிலுக்குள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது பூசாரி வெள்ளையன் கோயிலில் இருந்த வேலை எடுத்து, கோயில் பூட்டை உடைத்து, உள்ளே உண்டியல் பூட்டை உடைத்து பணம் திருடியது தெரியவந்தது. பொதுமக்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் பூசாரி வெள்ளையனை பிடித்து ஓமலூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வெள்ளையனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.