மதுரை: மதுரை மாட்டுத்தாவணி அருகே தனியார் விடுதியில் ஆண், பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கொடிகுளத்தைச் சேர்ந்த நாகராஜன் மகன் கார்த்திகேயன் (38). இவர் மாட்டுத் தாவணி பகுதியிலுள்ள வர்த்தக நிறுவனத்தில் பணி புரிந்தார். இவரது மனைவி கோவையில் உள்ளார். இதே நிறுவனத்தில் மதுரை ஒத்தக்கடை அருகிலுள்ள அரும்பனூர் மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்த பிரபு என்பவரின் மனைவி ரஞ்சனியும் வேலை பார்த்தார்.
கணவரை பிரிந்த இவருக்கும், கார்த்திகேயனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மாட்டுத்தாவணி அருகே தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். நேற்று காலை வரை இருவரும் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த விடுதி நிர்வாகத்தினர் இது குறித்து புதூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்து பார்த்தபோது இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் இருவரின் உடல்களையும் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் விசாரணையில் தெரிய வந்ததாவது: திருமண மான ஒரு மாதத்திலேயே கார்த்திகேயனை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். அதேபோல கணவரை பிரிந்த ரஞ்சனியும் கார்த்திகேயனுடன் நெருங்கி பழகி உள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர். சேர்ந்து வாழ முயன்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.