சென்னை: வெளிநாட்டுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதாகக் கூறி ரூ.55 லட்சம் பணம் பெற்று மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர். ஆப்பிரிக்க நாடான சூடானைச் சேர்ந்தவர் சாகுல் அமீது. இவர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்தும் துரைப்பாக்கத்தை சேர்ந்த ப.முகமது ஜாகீர் உசேன் (33) என்பவரிடம், ரூ.2 கோடி மதிப்புள்ள அரிசியை சூடான், துபாய்க்கு ஏற்றுமதி செய்யுமாறு ஒப்பந்தம் செய்தார்.
ஒப்பந்தத்தின்படி சாகுல் அமீது முன் பணமாக3 தவணைகளாக ரூ.54,99,300 ஜாகீர் உசேனுக்குஅனுப்பி வைத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட ஜாகீர் உசேன், அரிசியை ஏற்றுமதி செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து சாகுல் அமீது தான் வழங்கிய பணத்தை ஜாகீர் உசேனிடம் திருப்பிக் கேட்டுள்ளார்.
ஆனால் ஜாகீர் உசேன், பணத்தை திருப்பி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக சாகுல்அமீது, சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் ஜாகீர் உசேன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஜாகீர் உசேனை நேற்றுகைது செய்தனர். அவரிடம் இருந்து கார், மடிக்கணினி, 11 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன.